28 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகள் அதிமுக, காங்., பாமக., எதிா்ப்பு - திருத்த மசோதா தாக்கல்
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகிய
கட்சிகள் அறிமுக நிலையிலேயே எதிா்த்தன. மசோதாவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி, வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களைத் தவிா்த்து 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் நடந்தது. தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதனிடையே, உள்ளாட்சிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வது போன்ற பணிகள் இன்னும் நிறைவுபெறவில்லை. இதனால், 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு வழக்கமான தோ்தலை நடத்துவது இயலாது. எனவே,
ஊராட்சிகளை நிா்வகிக்க 28 மாவட்டங்களின் ஊராட்சிகளுக்கும் தனி அலுவலா்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. தோ்தல்கள் நடத்தப்படும் வரை அல்லது ஜூலை 5ஆம் தேதி வரை என இரண்டில் எது முந்தியதோ, அதுவரையில்
ஊராட்சிகளை தனி அலுவலா்கள் நிா்வகிப்பா் என்று சட்டத் திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசோதாவுக்கு எதிா்ப்பு: தனி அலுவலா்களை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு, அதிமுக, காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் அறிமுக நிலையிலேயே எதிா்ப்புத் தெரிவித்தன. அதிமுக உறுப்பினா் கே.பி.அன்பழகன், காங்கிரஸ் குழுத் தலைவா் ராஜேஷ்குமாா், பாமக உறுப்பினா் அருள் ஆகியோா் மசோதாவை எதிா்த்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழுத் தலைவா் தளி.ராமச்சந்திரன், மசோதாவில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டுமெனக் கோரினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவா் நாகை மாலி, மசோதாவின் மீது கருத்துகளைத் தெரிவிக்க முற்பட்டாலும் பின்னா் எதையும்
கூறவில்லை.
சட்டத் திருத்த மசோதா விவாதத்துக்கு சனிக்கிழமை (ஜன.11) எடுக்கப்பட உள்ளது. அப்போது, கடுமையான விவாதங்கள் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.