செய்திகள் :

3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

post image

உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பேசியிருக்கிறார்.

கரோனாவுக்குப் பிந்தைய இந்தியாவின் பொருளாதார மீள்ச்சி குறித்தும் இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டிருப்பது குறித்தும் போதுமான அளவுக்கு அந்நியச் செலாவணி இருப்பதையும் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார்.

“கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரத்தின் சாதனைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நம்பிக்கைக்கு பாத்திரமானதாகவும் பரந்தளவில் அங்கீகரிக்கப்பட்டும் உள்ளது. இன்று இந்திய பொருளாதாரம் பெரும்பொருளாதாரத்தின்(மேக்ரோ எகனாமிக்) அடிப்படைகளால் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் ஆண்டுகளில் நாம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறவிருக்கிறோம்.

கடந்த நான்காண்டுகளில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் இந்திய பொருளாதாரம் சுமார் 8 சதவீதத்தை எட்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக சராசரி பணவீக்கம் 4.9 சதவீத அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

2024-ஆம் நிதியாண்டில் நடப்புகணக்கு பற்றாக்குறையானது ஜிடிபியின் 0.6 சதவீதம் என்ற அளவில் நிலைபெற்றிருக்கிறது.

நாங்கள் நிதி நிலைத்தன்மையை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தொடருவோம். இதுவே எங்களது முதன்மை குறிக்கோள்.

இந்தியாவின் அந்நியச் செலாவணி 695 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் நிலைபெற்றிருக்கிறது. இது, 11 மாத காலத்துக்கு இறக்குமதியைக் கையாள தேவையான அளவுக்கான தொகையாகும்.

இவையனைத்திற்கும் முக்கிய காரணமாக நிதி கொள்கைகள், அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், பரந்தளவிலான உள்கட்டமைப்பு வளர்ச்சி, மேம்பட்ட நிர்வாகம், அதிக உற்பத்தி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

வெளிப்புற சவால்களுக்கு மத்தியிலும், விலையில் நிலைத்தன்மையை உறுதிபட வைத்திருக்கச் செய்தல் மூலம் இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை தொடர்ந்து கடைப்பிடிக்கிறது” என்றார்.

‘Third largest economy in coming years’: RBI Governor Sanjay Malhotra