`துரதிஷ்டவசமாக நான் அவனை நம்பினேன். ஆனால்!' திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்...
Lionel Messi: `கேரளா வருகிறார் லியோனல் மெஸ்ஸி' - உறுதியான தகவல்... உற்சாகமான ரசிகர்கள்!
கேரள மாநிலத்தில் கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும்போது கேரளா மாநிலம் முழுவதும் கட்அவுட்டுகள், பேனர்கள் வைத்து திருவிழா போன்று களைக்கட்ட வைத்துவிடுவார்கள். கால்பந்து விளையாட்டு வீரர்களையும் கொண்டாடுவதில் சளைத்தவர்கள் அல்ல கேரள ரசிகர்கள். பிபா உலகக்கோப்பை சாம்பியன் மெஸ்ஸியை கேரளாவுக்கு அழைத்து விளையாட வைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருந்தது. அந்த கனவு விரைவில் நிறைவேறப்போகிறது. லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி, வரும் நவம்பர் 10 முதல் 18 வரையிலான இடைப்பட்ட ஒருநாளில் கொச்சியில் நட்புப் போட்டியில் விளையாடும். இதற்கான தகவலை அர்ஜெண்டினா புட்பால் அசோசியேசன் அறிவித்துள்ளது. அக்டோபர் 6 முதல் 14 வரை அமெரிக்காவிலும், நவம்பர் 10-ம் தேதி முதல் 18-ம் தேதிக்கு இடைப்பட்ட நாள்களில் லுவாண்டாவிலும், இந்தியாவின் கேரளாவிலும் அர்ஜெண்டினா டீம் வர உள்ளதாகவும்... அப்போது நட்பு அடிப்படையில் கால்பந்து விளையாட உள்ளதாகவும் அர்ஜெண்டினா புட்பால் அசோசியேசன் அறிவித்துள்ளது. எதிரணியில் விளையாடும் அணி குறித்த தகவல் வெளியாகவில்லை.

இதுகுறித்து கேரள மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் வி.அப்துரஹ்மன் கூறுகையில், ``உலக கோப்பை வென்ற அர்ஜெண்டினா அணியின் அதே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கேரளாவுக்கு அழைத்துவர முயன்றுவருகிறோம். அர்ஜெண்டினா அணியின் விளையாட்டை சாதாரண ரசிகர்களும் பார்க்க வாய்ப்பு வழங்குவதுதான் நமது லட்சியமாக உள்ளது" என்றார்.

மெஸ்ஸி உள்ளிட்ட அர்ஜெண்டினா அணியை கேரளாவுக்கு அழைத்துவர வேண்டும் என ரசிகர்கள் ஏற்கெனவே கோரிக்கைவிடுத்திருந்தனர். அவரது வருகை தாமதமாகிக்கொண்டிருந்த நிலையில் அது கேரளாவில் அரசியல் விவாதமாகவும் மாறியது. மெஸ்ஸி கேரளா வரும் தகவல் உறுதியானதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்தியாவில் சிறந்த விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹ்மான்-தான் என புட்பால் ரசிகர்கள் புகழாரம் சூட்டிவருகின்றனர்.