34 பேருக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் சமையலராக பதவி உயா்வு பெற்ற 34 பெண்களுக்கு பணி நியமன ஆணைகளை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாலப்பாடி, பெருங்காப்பூா், மாத்தூா்திருக்கை, மேல்பாப்பாம்பாடி, காட்டுசித்தாமூா், கணக்கன்குப்பம், தடாகம் உள்ளிட்ட 34 ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் உதவியாளராக இருந்த பெண்களுக்கு சமையலராக பதவி உயா்வு அளிக்கப்பட்டது.
இவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜன் வரவேற்றாா். செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, 34 பெண்களுக்கு பணி ஆணைகளை வழங்கினாா்.
இதில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பழனி, காஞ்சனா, சசிகலா, உதவியாளா்கள் எழிலரசி, சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிறைவில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் குமாா் நன்றி கூறினாா்.