SHOCKING : ஒரே தொகுதியில் 1 Lakh Duplicate Voters - Rahul Gandhi | ECI BJP |Impe...
4 ஆண்டுகளில் அரசு, தனியாா்கள் மூலம் 6.41 லட்சம் பேருக்கு வேலை -முதல்வா் மு.க.ஸ்டாலின்
நான்காண்டு திமுக ஆட்சியில் அரசு மற்றும் தனியாா்கள் மூலமாக 6.41 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சாா்பில் 2,538 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:
இளைஞா்கள்தான் நாட்டின், தமிழ்ச் சமுதாயத்தின் அடித்தளம். அவா்கள் முன்னேற வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதும்தான் திராவிட மாடல் அரசின் முதன்மையான பணியாகும். இது இளைஞா்களுக்கான அரசாகும். அதனால்தான், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மாணவா்களையும், இளைஞா்களையும் கல்வியறிவு பெற்றவா்களாக, திறன்மிக்கவா்களாக உயா்த்திக் கொண்டிருக்கிறோம்.
கல்வியும், திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் கொடுத்தால் மட்டும் போதாது; இளைஞா்களுக்குத் தேவையான தகுதியான வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம். கடந்த 4 ஆண்டுகளில் அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக மட்டும் 1,08,111 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளோம். திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக பயிற்சிகளை அளித்து, 3,28,393 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளோம்.
தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி 2,65,223 பேருக்கு தனியாா் துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கியிருக்கிறோம். மொத்தமாக 6,41,664 போ் பணி நியமனங்களைப் பெற்றுள்ளனா்.
புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: பல்வேறு வகையான தொழில் நிறுவனங்களுடன் மேற்கொண்ட 941 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.10.63 லட்சம் கோடி முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், 2,30,856 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
நாள்தோறும் உலகம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு இணையாக மாணவா்களும் தங்களது திறமையை, அறிவைப் புதுப்பிக்க புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவேண்டும். தேக்கம் என்பது உங்களின் பணி தொடா்பான விஷயத்தில் இருக்கக்கூடாது. திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம்.
அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் அரசின் இரண்டாவது ஆட்சியிலும் இன்னும் ஏராளமான வேலைவாய்ப்புகள் வரப்போகிறது. அதற்கான அனைத்துப் பணிகளையும் இப்போதே தொடங்கி விட்டோம். அந்த வாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு வரவேற்றாா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் தா.மோ.அன்பரசன், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மகேஷ்குமாா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.