Mariselvaraj-ஐ வாழ்த்தி பாடிய Vadivelu at Ananda Vikatan Cinema Awards 2024 | UN...
அயர்லாந்து: ``இந்தியாவுக்கு திரும்பிப் போ'' - சிறுமியை தாக்கிய சிறுவர் கும்பல்; என்ன நடந்தது?
அயர்லாந்தில் கடந்த 8 ஆண்டுகளாக செவிலியர் பணி செய்து வரும் பெண் தன் 2 குழந்தைகள், கணவருடன் அங்கு வசித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்புதான் அயர்லாந்தின் குடிமக்களாக குடியுரிமை பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு செவிலியரின் 12 வயது மகள் மாலை 7 மணியளவில் அந்தப் பகுதி சிறுமிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது இன்னொரு குழந்தைக்கு உணவளிக்க செவிலியர் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.

இந்த சூழலில், சில சிறுவர்கள் சிறுமியை தாக்கி, ``அசிங்கமானப் பெண், மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்" என கெட்டவார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து, சிறுமி வீட்டுக்குள் வந்து அழுதிருக்கிறார். இது தொடர்பாக அந்த செவிலியர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், `` கடுமையாக தக்கப்பட்டிருந்த என் மகளால் பேசக்கூட முடியவில்லை. அவள் மிகவும் பயந்தாள். என் மகளை நான் அப்படி ஒருபோதும் பார்த்ததில்லை.
நான் அவளுடைய தோழிகளிடம் என்ன நடந்தது என்று கேட்டேன், அவர்கள் அனைவரும் மிகவும் வருத்தப்பட்டனர். அவர்களாலும் எதுவும் பேச முடியவில்லை. அவர்களில் ஒருப் பெண் மட்டும், ஒரு சிறுவர்கள் கும்பல் சைக்கிளில் வந்தார்கள். அவர்கள் இவளைத் தாக்கி, திட்டினார்கள் என நடந்ததை விளக்கினாள். இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவள் இங்கே பாதுகாப்பாக இருப்பாள் என்று நினைத்தேன்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு தாக்கிய சிறுவர்களின் கும்பலைப் பார்த்தேன். அவர்கள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எனக்கு கார்டாவிடம் (காவல்துறை) புகாரளிக்க விருப்பம் இல்லை. அந்தச் சிறுவர்கள் தாக்கப்படுவதை விரும்பவில்லை. ஆனால், அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அவர்கள் குழந்தைகள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் மற்ற குழந்தைகளை எப்படி நடத்துவது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். நான் இந்தியராக இருப்பதில் பெருமைப்படுறேன் அதேநேரம் இதுவும் என் நாடு என நம்புகிறேன். நான் இங்கேதான் வாழ்கிறேன்." என்றார்.

அயர்லாந்தில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள்
தொடர்ந்து அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. கடந்த மாதம், டல்லாட்டில் நடந்த இனவெறித் தாக்குதலில் ஒரு இந்தியர் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தார்.
இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் உடல் ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அயர்லாந்தில் உள்ள இந்திய குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெறிச்சோடிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தலை வெளியிட்டது. இந்த மாத தொடக்கத்தில், ஒரு இந்திய டாக்ஸி ஓட்டுநர் வாடிக்கையாளர்களாக நடித்த இரண்டு நபர்கள் "உன் சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போ" என்று கத்திக் கொண்டே தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.