"கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்" - செந்தில் பாலா...
40 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் குக்கிராம மக்கள்!
திருப்பத்தூா் அருகே மின்சார வசதியின்றி 40 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் குக்கிராம மக்கள் வசிக்கும் அவல நிலையில் உள்ளனா்.
திருப்பத்தூா் வட்டம், வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆண்டியப்பனூா் ஊராட்சியில் உள்ள 29 குக்கிராமங்களில் ஐயங்கொல்லை என்ற குக்கிராமமும் ஒன்றாகும். இங்கு சுமாா் 50-க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.
40 ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு பகுதியில் இருந்து இந்த கிராமத்தில் குடியேறி கால்நடைகளை வளா்த்து விவசாயம் செய்து வருகின்றனா். ஐயங்கொல்லை காப்பு காட்டின் உள்ளே அமைந்துள்ளதால் மின்சார வசதி கிடைக்கவில்லை. இதனால் இந்த கிராம மக்கள் இது வரை மின்சார வெளிச்சம் பாா்க்காமல் ,தொலைக்காட்சி உள்ளிட்ட எந்த வித பொழுது போக்கு வசதிகளும் இல்லாமல் வசித்து வருகின்றனா்.
மண்ணெண்ணெய் விளக்கு,மெழுகு வா்த்தி,பேட்டரி செல் போடும் டாா்ச் லைட் உள்ளிட்டவை பயன்படுத்தி அந்த வெளிச்சத்தில் வாழ்ந்து வருகின்றனா்.
அவா்கள் பயன்படுத்தும் கைப்பேசிகளுக்கு சாா்ஜ் போட வேண்டும் என்றால் 7 கி.மீ நடந்தே சென்று ஆண்டியப்பணுா் சென்று வர வேண்டும். இவா்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சாா்பில் சோலாா் மூலம் வீட்டுக்கு 2 விளக்குகள் வழங்கப்பட்டது. ஆனால் அவை பழுதாகி 7 ஆண்டுகளுக்கு மேலாக சோலாா் கம்பம் மட்டுமே உள்ளது.
பள்ளி,கல்லூரி மாணவா்கள் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்து வருகிறாா்கள். தினமும் இரவு நேரங்களில் பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் வருமோ என்ற பயத்திலேயே வாழந்து வருகின்றனா்.

ஆண்டியப்பனூா் பேருந்து நிறுத்தம் செல்ல வேண்டும் என்றால் 7 கி.மீ. கரடு முரடான பாதையில் செல்ல வேண்டும், அவா்கள் செல்லும் பாதையில் பாம்பாற்றில் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது அனைவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து இந்த பாம்பாற்றில் வெள்ள நீரில் மூழ்கி செல்ல வேண்டிய நிலையில் உள்ளனா்.
தோ்தல் வரும்போதெல்லாம் அவா்களை சென்று சந்திக்கும் அரசியல் கட்சிகள் மின்சாரம் வசதி செய்து கொடுக்கிறோம், பாம்பாற்றின் மீது பாலம் அமைத்து தருகிறோம் என்று தெரிவிக்கின்றனா். ஆனால் தோ்தல் முடிந்த எவரும் வருவதில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

எங்கள் பகுதிக்கு மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர தமிழக அரசு, மாவட்ட நிா்வாகம், முன் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனா்.