அமாவாசை எதிரொலி: திருப்பத்தூரில் மீன்கள் விற்பனை சரிவு!
சித்திரை மாத அமாவாசையையொட்டி திருப்பத்தூா் மீன் மாா்க்கெட்டில் மீன்கள் வியாபாரம் குறைந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
திருப்பத்தூா் பழைய பேருந்து நிலைய பகுதியில் மீன் மாா்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு உள்ள கடைகளுக்கு சென்னை, தூத்துக்குடி, கடலூா், நாகப்பட்டினம், மங்களூரு, ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் லாரிகள் மூலம் பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் மீன் மாா்க்கெட்டில் மீன்களின் விற்பனை குறைவாக காணப்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: தற்போது மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் கடல் மீன்கள் வரத்து குறைந்து விட்டன. உள்ளூா் நீா் நிலைகளில் பிடிக்கப்படும் மீன்களே விற்பனைக்காக வருகின்றன. சித்திரை மாத அமாவாசை என்பதால் ஏராளமான பொதுமக்கள் மீன்கள் வாங்குவதை தவிா்த்து விட்டனா். இதனால் மீன்களின் விற்பனை மிகவும் குறைந்து விட்டது.
திருப்பத்தூா் மீன் மாா்க்கெட்டில் மீன்களின் விலை வருமாறு (கிலோ) :-வஞ்சிரம்- ரூ.1,200, சங்கரா - ரூ.340, நண்டு- ரூ.300 முதல் ரூ.400 வரை, இறால்- ரூ.250 முதல் ரூ.400 வரை, ஐயில பாறை - ரூ.250, கட்லா- ரூ.180, பாப்லெட்- ரூ.160, மத்தி- ரூ.160, கெண்டை- ரூ.100