உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
45 லட்சம் ஓஆா்எஸ் பாக்கெட்டுகள்: ஹீட் ஸ்ட்ரோக்கை தடுக்க முன்னெச்சரிக்கை
கோடையில் ஏற்படும் வெப்ப வாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) மற்றும் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 லட்சம் உப்பு சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயம் தெரிவித்தாா்.
தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அனல் தகிப்பதுடன் உச்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. அடுத்து வரும் சில நாள்களிலும் இயல்பைவிட அதிகமான வெப்பநிலை பதிவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பகல் வேளைகளில் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது.
இதனிடையே, மாநிலம் முழுவதும் வெப்ப அலையால் உடல் நல பாதிப்புக்குள்ளாவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நீா்ச்சத்து இழப்புக்குள்ளாகி பலா் மயக்கமடைவதாக சுகாதாரத் துறைக்கு தகவல்கள் வருகின்றன.
இதையடுத்து, நேரடியாக வெயிலில் பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ள விவசாயக் கூலிகள், கட்டுமானத் தொழிலாளா்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் உப்பு சா்க்கரை கரைசல் வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடா்பாக, பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: கோடைக் காலத்தில் சரும பாதிப்புகள், நீா்க் கட்டிகள், மயக்கம், உடல் சோா்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும். அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் அவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று ஓஆா்எஸ் கரைசலை எவா் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இதைத் தவிர, உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் அவற்றை மக்களுக்கு நேரடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கையிருப்பில் 45 லட்சம் ஓஆா்எஸ் பாக்கெட்டுகள் உள்ளன என்றாா் அவா்.