``5 ஆண்டில் 10 மடங்கு அதிகரித்த அமைச்சரின் சொத்து.. எப்படி?'' - வருமான வரித்துறை நோட்டீஸ்
மகாராஷ்டிராவில் சமூக நீதித்துறை அமைச்சராக இருப்பவர் சஞ்சய் ஷிர்சாத். துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ஷிர்சாத் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது தனக்கு ரூ.35 கோடி அளவுக்கு சொத்துகள் இருப்பதாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

சாம்பாஜி நகர் மேற்கு தொகுதி எம்.எல்.ஏவான சஞ்சய் ஷிர்சாத் தனது மனைவி பெயரில் ரூ.19.7 கோடி மதிப்புள்ள வீடு, நிலம் போன்ற சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் சஞ்சய் ஷிர்சாத் தனது பெயரில் தங்க ஆபரணங்கள், வங்கி வைப்புத்தொகை உள்பட மொத்தம் ரூ.13.4 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாகவும், ரூ.18 லட்சம் மதிப்புள்ள கார் இருப்பதாகவும் சஞ்சய் ஷிர்சாத் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் 2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது தனக்கு 3.3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். அதாவது 5 ஆண்டில் அமைச்சரின் சொத்து 10 மடங்குக்கு அதிகரித்துள்ளது.
எப்படி 5 ஆண்டில் இந்த அளவுக்கு சொத்து அதிகரித்தது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ஜூன் 9ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் கொடுக்கவேண்டும் என்று சஞ்சய் ஷிர்சாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து சஞ்சய் ஷிர்சாத் கூறுகையில், ''வருமான வரித்துறை எனது சொத்து அதிகரித்து இருப்பதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதில் படிக்க ஒன்றுமில்லை. விளக்கமளிக்க அவகாசம் கேட்டு இருக்கிறேன். வருமான வரித்துறையோ அல்லது வேறு எந்த துறையோ அவர்கள் அவர்களது கடமையை செய்கின்றனர். இதில் தவறு இல்லை. சிலர் எனக்கு எதிராக வருமான வரித்துறையில் புகார் கொடுத்துள்ளனர். அதனால்தான் அவர்கள் எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். எங்களது கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்தில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக நாங்கள் நினைக்கவில்லை.
அரசு விசாரணை அமைப்புகள் எதைப்பற்றியும் விசாரிக்க உரிமை இருக்கிறது. கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட போது அனைத்து விபரங்களையும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருந்தேன்''என்று குறிப்பிட்டார்.
சஞ்சய் ஷிர்சாத் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தனது தொழிலாக சமூக சேவகர், விவசாயி, காண்டிராக்டர், பில்டர் என்று குறிப்பிட்டு இருந்தார். சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே மற்றும் ஔரங்காபாத் முன்னாள் எம்.பி. இம்தியாஸ் ஜலீல் ஆகியோர் அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தனர்.
இதற்கு முன்பு சஞ்சய் ஷிர்சாத் அளித்திருந்த பேட்டியில், `துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே-க்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது' என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் அதனை ஷிர்சாத் பின்னர் திரும்ப பெற்றுக்கொண்டார். ஸ்ரீகாந்த் ஷிண்டே தற்போது கல்யான் தொகுதி எம்.பியாக இருக்கிறார். சிவசேனா வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்ரீகாந்த் ஷிண்டே-க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் எதையும் அனுப்பவில்லை என்று குறிப்பிடுள்ளது. அடுத்த சில மாதங்களில் மும்பை உள்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் மும்பை மாநகராட்சியில் தங்களுக்கு 100 வார்டுகளை ஒதுக்க வேண்டும் என்று சிவசேனா இப்போதே பா.ஜ.கவிற்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளது. எனவே சிவசேனாவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அக்கட்சியினருக்கு வருமான வரித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.