இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
100 ரூபாய்க்கு 20 எலுமிச்சை; தொழில் துறையினருக்கு வாக்குறுதி.. எடப்பாடி பழனிசாமி கோவை ரவுண்ட் அப்
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் இருந்து தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார். நேற்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகளில் அவர் பிரசார பேருந்தில் பயணம் செய்து மக்களிடம் உரையாடினார்.

இரண்டாவது நாளான இன்று கோவை தெற்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதிகளில் பயணம் செய்து வருகிறார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி வெள்ளைச் சட்டை, டிராக் பேன்ட் அணிந்து நடைப்பயிற்சி மேற்கொண்டு, அங்கு உடற்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் உரையாடினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “2024 - 25 நிதியாண்டில் உபரி வருவாய் கிடைத்தும், திமுக அரசு கடன் வாங்கியுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். திமுக ஊழல் குறித்தும் கமிஷன் அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள், மக்களுடன் தேநீர் அருந்தினார். சாலையோர வியாபாரியிடம் ரூ.100 கொடுத்து 20 எலுமிச்சைபழங்களை வாங்கினார்.
பிறகு கோவை குறு, சிறு தொழில்துறையினர், மகளிர் சுய உதவிக் குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல் நடத்தினார். அப்போது தொழில்துறையினர் கோரிக்கைகளுக்கு பதிலளித்த அவர், “மின் கட்டண உயர்வால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார நிலைக்கட்டண பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நம் ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் மானிய விலையில் அம்மா இரு சக்கரம் வழங்கப்படும்.” என்றார்.
இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து இன்று மதியம் மாற்றுக் கட்சியினர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் பிறகு மாலை வடவள்ளி பகுதியில் இருந்து மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளில் உரையாற்றவுள்ளார்.