`500 பேரிடம் மட்டுமே இருக்கும் பாஸ்போர்ட்' அரிதானதாக இருக்கக் காரணம் என்ன?
நாடு விட்டு நாடு, பயணிப்பவர்களுக்கு பாஸ்போர்ட் அவசியமான ஒன்று. அயல் நாடுகளில் பாஸ்போர்ட் இல்லாமல், அடியெடுத்து வைக்க முடியாது. பாஸ்போர்ட் கையிலிருந்தால்தான் நீங்கள் ஒரு நாட்டிற்குள் சுதந்திரமாகச் சுற்றி வர முடியும்.
பாஸ்போர்ட் வழங்குவதன் அடிப்படை நோக்கமே, ஒரு நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர், எங்கிருந்து வருகிறார், எங்கு சென்றார், எங்கு செல்கிறார் போன்ற விஷயங்களைக் காட்டுவதற்காகத்தான். அப்படி முக்கியமானதாக இருக்கும் பாஸ்போர்ட்டின் மதிப்பு ஒவ்வொரு நாட்டிற்கேற்ப மாறுபடுகிறது.
உலகளவில் மதிப்புமிக்க பாஸ்போர்ட்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 80ம் இடத்தில் உள்ளது. தொடர்ந்து 5ஆம் ஆண்டாக ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளின் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது.
ஜப்பானிய பாஸ்போர்ட் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களில் ஒன்றாக இருப்பதால் அதனை வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் உலகின் மிகவும் அரிதான பாஸ்போர்ட் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
உலகளவில் சுமார் 500 பேர் மட்டும் தான் வைத்திருக்கிறார்களாம். உலகின் மிக அரிதான பாஸ்போர்ட் மால்டா தீவின் இறையாண்மை இராணுவ ஆணையால் (Sovereign Military Order of Malta) வழங்கப்பட்டுள்ளது. இது பொதுவாக ஆர்டர் ஆஃப் மால்டா அல்லது நைட்ஸ் ஆஃப் மால்டா என்று அழைக்கப்படுகிறது. இது எந்த பிரதேசத்தையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், இந்த ஆணை பெரும்பாலும் சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு இறையாண்மை நிறுவனமாகக் கருதப்படுகிறது . இந்த ஆணை தனிப்பட்ட கார் உரிமத் தகடுகள், நாணயம், பாஸ்போர்ட் மற்றும் முத்திரைகளை வெளியிடுகிறது. தற்போது, உலகளவில் சுமார் 500 இராஜதந்திர பாஸ்போர்ட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாஸ்போர்ட்டுகள் 44 பக்கங்களைக் கொண்டுள்ளன.
அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் இந்த பாஸ்போர்ட்டை பயணத்திற்கான சரியான ஐடியாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், இது 120 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.