வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
`6 ஆண்டுகள் பொறியியல் படிப்பில் தோல்வி' - படிப்பை விடச் சொன்னதால் பெற்றோரை கொலை செய்த மாணவர்
தங்களது குழந்தைகள் என்ன படிக்கவேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோருக்கும் கனவு இருக்கும். ஆனால், பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெற்றோர் விரும்பும் படிப்பை படிக்காமல் தாங்கள் விரும்பும் படிப்பை படிப்பது வழக்கம். மகாராஷ்டிராவில் அது போன்ற ஒரு சம்பவம் விபரீதத்தில் முடிந்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் நாக்பூர் கபில் நகரில் வசித்து வந்தவர் லீலாதர்(55). இவரது மனைவி அருணா ஆசிரியையாக இருக்கிறார். இவரது மகன் உத்கர்ஷ் (25). தனியார் பொறியியல் கல்லூரியில் எஞ்சினியரிங் படித்து வந்தார். அவர் தேர்வில் தொடர்ந்து தோல்வி அடைந்து, 6 ஆண்டுகளாக அதையே படித்துவந்தார்.
அதிகமான பாடங்களில் தோல்வியடைந்து வருவதால் எஞ்சினியரிங் படிப்பை கைவிட்டுவிட்டு விவசாயத்தில் கவனம் செலுத்தும்படி பெற்றோர்கள் அறிவுறுத்தி வந்தனர். ஆனால், உத்கர்ஷ் தனது எஞ்சினியரிங் படிப்பை தொடர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
உத்கர்ஷுக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்தது. இதனால், அவரால் சரியாக படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் மகனுக்கும் பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், லீலாதர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இது குறித்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து லீலாதர் வீட்டுக் கதவை திறந்து பார்த்தபோது லீலாதர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இருவரும் ஒரு வாரத்திற்கு முன்பே கொலை செய்யப்பட்டு இருந்ததால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து அவர்களது மகன் உத்கர்ஷிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திய போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், "கடந்த 26ம் தேதி உத்கர்ஷ் வீட்டில் இருந்த தனது தாயாரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மாலை 5 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தந்தையை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். பின்னர் அவர்களை அப்படியே போட்டுவிட்டு, தனது இளைய சகோதரியை அழைக்க கல்லூரிக்குச் சென்றார். அங்கு தனது சகோதரியிடம் பெற்றோர் தியானத்திற்காக பெங்களூரு சென்று இருப்பதாக கூறி அவரை அழைத்துக்கொண்டு தனது மாமா வீட்டிற்குச் சென்றார். அவர்களிடமும் அதையே சொல்லி ஒரு வாரம் தங்கி இருக்கிறார்" என்று தெரிவித்தனர்.