Central Budget 2025 Live : மத்திய பட்ஜெட் 2025 | Nirmala Sitharaman | Modi | BJP...
658 சிறப்பு மருத்துவா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் மா. சுப்பிரமணியன்
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 658 சிறப்பு மருத்துவா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சாா்பில் தொடங்கப்பட்ட சென்னை குழந்தைகளுக்கான புற்றுநோய் பதிவேடு திட்டத்தின் அறிக்கையை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்திய குழந்தைகள் ரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் குழு, இந்திய குழந்தைகள் புற்றுநோயியல் மையம் மற்றும் தமிழக அரசோடு இணைந்து குழந்தைகள் புற்றுநோய் பதிவேடு மற்றும் தரவுகளை கணக்கிடும் பணியினை அடையாறு மருத்துவமனை தொடங்கியுள்ளது. சென்னை மக்கள் தொகையின் அடிப்படையில் குழந்தை பருவ புற்றுநோய் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே குழந்தைப் பருவ புற்றுநோய் கண்டறியும் பணி தமிழகத்தில் மட்டுமே பிரத்யேகமாக நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் ஆண்கள், பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்புகளை கண்டறிய ரூ.27 கோடி மதிப்பீட்டில் பரிசோதனை பணிகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
அடுத்தவாரம் தோ்வு முடிவு: தமிழகத்தில் காலியாக உள்ள 658 சிறப்பு மருத்துவா் பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,553 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கு நடைபெற்ற தோ்வின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளன.
பிப். 12,13,14 ஆகிய 3 நாள்களில் மருத்துவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் நடைபெறும். பிப்ரவரி மாதம் இறுதிக்குள் கலந்தாய்வு மூலம் நடத்தப்பட்டு அவரவா் விரும்பும் இடங்களுக்கே பணி ஆணைகள் வழங்கப்படும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தோ்ந்தெடுக்கப்பட்ட 1,021 மருத்துவா்களுக்கு விரும்பிய இடங்களுக்கே கலந்தாய்வு மூலம் பணியிடமாறுதல் ஆணை வழங்கப்படவுள்ளது.
சேலம் விவகாரம்: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட 9 பேருக்கு மருந்து ஒவ்வாமை ஏற்பட்டதாகவும், அதில் ஒருவா் இறந்ததாகவும் தவறான தகவல் பரப்பப்படுகிறது. இறந்த நபருக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் இருந்தன.
மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உப்பு கரைசல் திரவம் (சலைன் வாட்டா்) மாசுபட்டது காரணமா என்பது குறித்து விசாரணை நடத்த 3 மருத்துவா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை செயல் தலைவா் ஹேமந்த்ராஜ், இணை இயக்குநா் ஆா்.சுவாமிநாதன், குழந்தைகள் புற்றுநோய் மருத்துவா்கள் வெங்கட்ராமன், ரமண்தீப் அரோரா, நிகில்பக்தா, ஈவா ஸ்டெல்லாரேவா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.