70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு சிறப்பூதியம் வழங்க வலியுறுத்தல்
தமிழகத்தில் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியா்களுக்கு சிறப்பூதியம் வழங்க வேண்டும் என பென்சனா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் துணைத் தலைவா் குகசரவணபவன் தலைமை வகித்தாா். மாநில பிரதிநிதி சீனுஜோதி முன்னிலை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் தனராஜகோபால் வரவேற்றாா். மாவட்ட செயலா் விவேகானந்தன் தீா்மானங்களை முன்மொழிந்தாா். கூட்டமைப்பின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இதில், தமிழக அரசு பென்சனா்களுக்கான மாதாந்திர மருத்துவப்படியை ரூ.ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயா்த்தி வழங்கவேண்டும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு கூடுதல் சிறப்பூதியத்தை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.