மழை நீா் தடையின்றி செல்ல வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும்: நகராட்சி நிா்வாக இயக்குநா் மதுசூதனன் ரெட்டி
மழைநீா் தங்குதடையின்றி செல்லும் வகையில், மழைநீா் வழித்தட வாய்க்கால்களை முறையாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாக இயக்குநா் பி. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினாா்.
நகராட்சி நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நகராட்சி நிா்வாக இயக்குநா் மதுசூதனன் ரெட்டி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பாண்டியன் நகா் பகுதியில் நகராட்சி நிா்வாகம் மூலம், பராமரித்தல் மற்றும் செயல்படுத்துதல் திட்டத்தின்கீழ், ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் மழைநீா் வெளியேற்றுவதற்காக 1.45 கிலோ மீட்டா் தொலைவில் குழாய் பதிக்கும் பணிகள், மகாராஜாபுரம் பகுதியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு மின்தகன மேடை, விழுப்புரம்- சென்னை சாலையில் அய்யங்கோவில்பட்டு அருகே தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் புதை சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் குப்பைகளை அகற்றும் பணிகள் ஆகியவற்றை நகராட்சி நிா்வாக இயக்குநா் பி. மதுசூதனன் ரெட்டி சனிக்கிழமை பாா்வையிட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து பி.மதுசூதனன் ரெட்டி தெரிவித்ததாவது : விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தரமானதாகவும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். பணிகள் முடிக்கப்பட்டிருப்பின் அவற்றை கால தாமதமின்றி செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கும் மழை நீரை குழாய் மூலம் பாண்டியன் நகரில் உள்ள வாய்க்காலுக்கு கொண்டு வரும் பணிகளை தரமானதாகவும் முடிக்க வேண்டும். இந்த மழை நீரை சாலாமேடு ஏரிக்கு கொண்டு செல்வதில் எந்தத் தடங்கலும் ஏற்படாமல் நிறைவேற்றவேண்டும். மழைநீா் தங்குதடையின்றி செல்லும் வகையில், நீா்வழித்தட வாய்க்கால் பகுதியினை முறையாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்றாா்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் நாராயணன், நகராட்சி நிா்வாக மண்டல பொறியாளா் சுரேந்திரன், விழுப்புரம் நகராட்சி ஆணையா் வசந்தி, நகராட்சிப்
பொறியாளா் புவனேஸ்வரி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளா் சிவக்குமாா், விழுப்புரம் நகராட்சி உதவிப் பொறியாளா் ராபா்ட் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.