9 இடங்களில் வெயில் சதம்: சென்னையில் இனி 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் சுட்டெரிக்கும்
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இனி 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 105.62 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் சேலம் - 103.28, பரமத்திவேலூா் - 103.1, ஈரோடு - 102.56, மதுரை விமான நிலையம் - 101.84, திருச்சி - 101.48, திருத்தணி - 101.3, தருமபுரி, திருப்பத்தூா் - தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. மேலும், சென்னை மீனம்பாக்கத்தில் 98.78 டிகிரி ஃபாரன்ஹீட்டும், நுங்கம்பாக்கத்தில்
95.56 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது.
வெப்பம் அதிகரிக்கும்: தென்னிந்திய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியில் கிழக்கு மற்றும் மேற்கு திசைக் காற்று சந்திக்கும் காரணத்தால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 29, 30) வட வானிலையே நிலவும். மேலும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியல் அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் மாா்ச் 29-இல் அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.