ஒடிசாவில் 2 மாவோயிஸ்ட் முகாம்கள் தகர்ப்பு! வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல...
Afghanistan: தாலிபான் அமைச்சருடன் பேசிய ஜெய்சங்கர் - முக்கியத்துவம் ஏன்?
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் என இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே இருந்த நல்லிணக்க உறவு தற்போது சிக்கலில் இருக்கிறது. இரு நாடுகளும் மோதல் போக்கை தற்போது நிறுத்தியிருந்தாலும், இன்னும் நீறுபூத்த நெருப்பாகவே சூழல் தொடர்கிறது. இதற்கிடையில், பாகிஸ்தானிய தெஹ்ரீக்-இ-தலிபான்(TTP) அமைப்பை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான் அரசை நிர்வகிக்கும் தலிபான்கள் தவறிவிட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்த தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானை காரணம் காட்டுவதாக பாகிஸ்தானின் மூத்த தலைவர்கள் சமீப நாள்களாகப் பேசி வருகின்றனர். இந்த நிலையில், தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகியுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசியிருக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் துபாயில் தாலிபான் வெளியுறவு அமைச்சருக்கும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கும் இடையில் சந்திப்பு ஏற்பட்டது. அந்த சந்திப்புக்குப் பிறகே தற்போது இரு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த உரையாடல் குறித்து எஸ். ஜெய்சங்கர், ``இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்த ஆப்கானிஸ்தான் தாலிபான் ஆட்சி மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா வரவேற்கிறது. பஹல்காம் தாக்குதலுக்கு தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி கண்டனம் தெரிவித்ததை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
தவறான மற்றும் ஆதாரமற்ற செய்திகள் மூலம் இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் அவநம்பிக்கையை உருவாக்குவதற்கான முயற்சிகளை உறுதியாக நிராகரிக்கிறேன். ஆப்கானிய மக்களுடனான பாரம்பரிய நட்பு மற்றும் அவர்களின் வளர்ச்சித் தேவைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதை வலியுறுத்தூக்கிறோம். அதற்கான ஒத்துழைப்பை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ``இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், வர்த்தகத்தை மேம்படுத்துதல், இராஜதந்திர ஈடுபாட்டை மேம்படுத்துதல் குறித்து இருதரப்பிலிருந்தும் பேசப்பட்டது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான்-இந்தியா உறவு வலுவூட்டப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆப்கானிஸ்தான் வர்த்தகர்கள் மற்றும் நோயாளிகளுக்கு விசா வழங்குவதற்கு இந்தியா தொடர்ந்து முன்வர வேண்டும்.
தற்போது இந்தியாவில் வைக்கப்பட்டுள்ள ஆப்கானிய கைதிகளை விடுவித்து திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானுடனான இந்தியாவின் வரலாற்று உறவுகளை இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டி, அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து விவாதித்தார்.

ஆப்கானிய கைதிகள் பிரச்னையில் உடனடி கவனம் செலுத்தப்படும் என்றும், விசா செயல்முறையை சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெய்சங்கர் உறுதியளித்திருக்கிறார்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆகஸ்ட் 2021-ல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியப் பிறகு இந்திய அரசிற்கும் தாலிபான்களுக்கும் இடையிலான மிக முக்கிய உரையாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.