தமிழகத்தில் அநேக இடங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!
பாமக: `இது அப்பா-மகன் போர் மட்டும் அல்ல’ - கூட்டத்தை புறக்கணித்த அன்புமணியும், ராமதாஸ் ரியாக்ஷனும்
`பா.ம.க-வின் மாவட்டத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (இன்று) வெள்ளிக்கிழமை தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற இருக்கிறது. அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்’ என்று நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். கடந்த 11.05.2025 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற பா.ம.க சித்திரை முழுநிலவு மாநாட்டில், மருத்துவர் ராமதாஸ் பேச்சுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் எழுந்தன.
அதேபோல அந்த மேடையில் மருத்துவர் ராமதாஸ் பேரனும், இளைஞரணி தலைவருமான முகுந்தனுக்கு இருக்கை ஒதுக்கப்படாததும் விவாதப் பொருளானது. இந்த நிலையில்தான் இன்று காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார் மருத்துவர் ராமதாஸ்.

புறக்கணித்த அன்புமணி... 11 மாவட்ட செயலாளர்களை தவிர அனைவரும் `ஆப்சென்ட்’
ஆனால் செயல் தலைவரான அன்புமணி ராமதாஸ் இந்தக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டார். அதேபோல விருதுநகர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், கடலூர், சேலம், ஈரோடு, அரியலூர் தஞ்சை, திருவள்ளூர், கோவை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, புதுச்சேரியை சார்ந்த மாவட்ட தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதேபோல கெளரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சேலம் மேற்கு எம்.எல்.ஏ அருள், முன்னாள், எம்.எல்.ஏ மேகநாதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குறைவான நிர்வாகிகளே வந்திருந்த நிலையிலும், 10 மணிக்கு கூட்டம் துவங்கியது.
`படுத்துக் கொண்டே 50 தொகுதிகளில் வெற்றி’
அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் ராமதாஸ், ``இந்த கூட்டம் திடீர் கூட்டமல்ல. ஒரு வாரத்திற்கு முன்பே திட்டமிட்டு நடத்தபடும் கூட்டம். பா.ம.க படுத்துகொண்டே 50 தொகுதிகளில் வெற்றி பெறும் வித்தைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினேன். அதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. வன்னியர் சங்க மாநாட்டில் பிரமாண்டமான கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.
இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்றிருக்கின்றனர். வெற்றி பெறுவதற்கு எப்படி உழைப்பது, சட்டமன்ற தொகுதிகளில் எப்படி வெற்றி பெறுவது என்பதுடன் கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தற்காகவும் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

அடுத்தடுத்து தொடர்ந்து ஏழு நாட்கள் வன்னியர் சங்க நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கூட்டம் தைலாபுரத்தில் தினம்தோறும் நடைபெற இருக்கிறது. செயல்ப்தலைவர் அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் வரலாம், வராமலும் போகலாம்.
அது அவர் விருப்பம். சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு பிறகு களைப்புடன் இருப்பதால், சில மாவட்ட செயலாளர்கள் இந்தக் கூட்டத்திற்கு வரமுடியவில்லை. வர முடியாத மாவட்ட செயலாளர்கள் தொலைபேசி வாயிலாக என்னிடம் பேசினார்கள்.” என்றார்.
மாமனார் ராமதாசுக்கும், மருமகள் சௌமியா அன்புமணிக்கும் இடையே நடக்கும் போர்!
அதேபோல `மாவட்ட செயலாளர்கள் புறக்கணித்திருக்கிறார்களா’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ``யார் பேரையும் அவர்கள் விரும்பும் வரை கட்சியில் இருந்து நீக்க தேவையில்லை. அவர்களின் விருப்படி மாற்றபடுவார்கள்.
பா.ம.க-வில் கோஷ்டி மோதல் கிடையாது. கூட்டணி இல்லாமல் தனியாக நின்றாலும் 40 தொகுதிகள் வெற்றி பெறுவோம். அதேசமயம் இந்த தேர்தலில் கட்டாயம் கூட்டணி உண்டு. சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது.
ஆனால் கால்கள் பழுதுபடாத சிங்கத்தின் சீற்றம் அதிகமாக இருக்கும். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அந்த சீற்றம், எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது” என்றார். `வெறும் 11 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்களே…’ என்று பா.ம.கவி-ன் சீனியர் லீடர்கள் சிலரிடம் கேட்டோம்.

அதுகுறித்துப் பேசிய அவர்கள், ``சித்திரை முழு நிலவு மாநாட்டில் அன்புமணியை மறைமுகமாக விமர்சித்திருந்தார் மருத்துவர் ராமதாஸ். மாமல்லபுரம் வரைக்கும் மாவட்ட செயலாளர்கள் பாத யாத்திரையா சென்றார்கள்? அவர்கள் களைப்பாவதற்கு?
அன்புமணி அறிவுறுத்தலின் பேரில்தான் மற்ற மாவட்ட செயலாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்ளவில்லை. இது அப்பாவுக்கு மகனுக்கும் இடையே நடக்கும் போர் இல்லை. மாமனார் ராமதாசுக்கும், மருமகள் அன்புமணி சௌமியாவுக்கும் இடையே நடக்கும் போர் இது என்றுகூட கூறப்படுகிறது. விரைவில் அந்த உண்மைகள் வெளியில் வரலாம்” என்றனர்.