Ajith: "மனதளவில் மிடில் கிளாஸ்தான்; சூப்பர் ஸ்டார், தல பட்டங்கள் என்றுமே வேண்டாம்" - அஜித் குமார்
நடிகர் அஜித்குமார் நேர்காணல், திரைப்பட விழாக்களில் பல ஆண்டுகளாகவே கலந்துகொள்வதில்லை. சமூக வலைத்தளங்களில்கூட அவர் இருப்பதில்லை.
சினிமாவில் நடிப்பதைத் தாண்டி, தனது தனிப்பட்ட வாழ்க்கை, கார் ரேஸிங் எனத் தனக்குப் பிடித்த துறைகளில் பல்வேறு பங்காற்றி சாதனைகளைப் படைத்து வருகிறார்.
சினிமா, மோட்டார் ரேஸிங் துறையில் சிறந்து விளங்கி வரும் அஜித்குமாருக்கு நேற்று (ஏப்ரல் 28) பத்ம பூஷண் விருது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்பட்டது.
மனைவி ஷாலினி, குழந்தைகள் அனுஷ்கா-ஆத்விக் மற்றும் அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் அஜித் பத்மபூஷண் விருதைப் பெறுவதை நெகிழ்ச்சியுடன் பார்த்துப் பெருமிதப்பட்ட காணொலி, புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியிருந்தது.

இதையடுத்து பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அஜித் குமார் இரங்கல் தெரிவித்து, அனைவரும் வேற்றுமைகளை ஒதுக்கிவைத்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது நீண்ட நாள்களுக்குப் பிறகு ஆங்கில ஊடகமான 'India Today' ஊடகத்திற்கு முழு நீள நேர்காணல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் அஜித் குமார்.
அதில், பத்ம பூஷண் அஜித்குமார் என்று அழைப்பது எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு "இன்னும் மனதளவில் மிடில் கிளாஸாகத்தான் என்னை உணர்கிறேன்.
பத்ம பூஷண் என்று சொன்னால் இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இந்த பத்ம பூஷண் விருதை வழங்கிய குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களுக்கு நன்றி.
பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. இந்திய அரசாங்காத்திற்கு நன்றி. திரைப்படத் துறை, மோட்டர் ரேஸிங் துறை, சென்னை ரைபிள் கிளப் என அனைவருக்கும் நன்றி.
முக்கியமாக என்னுடைய குடும்பம், எனக்கு எப்போதும் துணையாக இருக்கும் மனைவி ஷாலினி, என் குழந்தைகளுக்கு நன்றி. என்னுடைய வெற்றி, தோல்வி என எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பது அவர்கள்தான்.
எல்லோருக்கும் என் நன்றிகள். இந்த விருது நான் சாரியான பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்று ஊக்கமளிக்கிறது" என்றார்
சூப்பர் ஸ்டார், தல என்று பட்டங்கள் குறித்துப் பேசியவர், "இந்தப் பட்டங்களில் எல்லாம் எனக்கு நம்பிக்கை. சினிமாவில் நடிக்கிறேன். அதற்கு நல்ல சம்பளமும் வாங்குறேன் அவ்வளவுதான்.
அதைத்தாண்டி இந்தப் பட்டங்கள் எல்லாம் தேவையில்லை. சினிமா தவிர தனிப்பட்ட வாழ்க்கை, எனக்குப் பிடித்த வேறு பல வேலைகள், கனவுகள் இருக்கின்றன. அதனால் அஜித் குமார், Ak, அஜித் என என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலே போதும் எனக்கு.
எனக்குப் பிடித்த வேலைகளை விரும்பிச் செய்கிறேன். என்னை எவ்வளவு சாதாரணமாக வைத்துக் கொள்ள முடியுமே, அவ்வளவு சாதாரணமாக வைத்துக் கொள்கிறேன்.
மக்கள் என்மீது அதீத அன்பு வைத்திருக்கிறார்கள். நான் எந்தத் துறையில் என்ன செய்தாலும் ஆதரவையும், அன்பையும் அள்ளித் தருகிறார்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக உணர்கிறேன்." என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
