Sachein: "அடுத்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காக்க காக்க ரீரிலீஸ்" - தயாரிப்பாளர் தாணு பேட்டி
விஜய் நடித்த 'சச்சின்' திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு, பெரும் ஆரவாரத்துடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, பலரும் திரளாகக் கூடி, படத்தை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் ரசித்து வருகின்றனர்.
ரீரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் படம் வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

மேலும், தனது முக்கிய படங்களை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அவரிடம் அவரது முயற்சிகள் குறித்துப் பேசினோம்.
தாணு பேசுகையில், "ரொம்ப நாளாகவே ரசிகர்கள் 'சச்சின்' படத்தை ரீரிலீஸ் செய்ய வேண்டும் என்று கேட்டு வந்தார்கள்.
அவர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரிப்பதைப் பார்த்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன்.
ஆனால், மக்கள் இப்படத்தை இவ்வளவு பெரிய அளவில் ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
திரையரங்குகளில் புதுப்படம் போல் கூட்டம் அலைமோதுகிறது.

தம்பி விஜய்யின் மாஸ் தனியாகத் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியையும், நுணுக்கமான இடங்களையும் ரசிகர்கள் ரசித்துக் கொண்டாடுகிறார்கள்.
ஜான் மகேந்திரன் கதை சொன்னபோதே பிடித்துப்போன விஜய், உடனடியாக 'சச்சின்' படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார்.
அப்போது சாதனை படைத்த இப்படம், மறுவெளியீட்டிலும் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.
இந்த வெற்றியால் உற்சாகமடைந்து, மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க முடிவு செய்திருக்கிறேன்.
விரைவில் அஜித்குமாரின் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', சூர்யாவின் 'காக்க காக்க' படங்களை இந்த ஆண்டுக்குள் ரீரிலீஸ் செய்யவுள்ளேன்.
அடுத்த ஆண்டு, ரசிகர்களின் விருப்பப்படி ரஜினிகாந்த்தின் 'கபாலி', விஜய்யின் 'தெறி', மற்றும் பாரதிராஜா இயக்கிய 'கிழக்கு சீமையிலே' ஆகிய படங்களை ரீரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளேன்.

புதிய படங்களின் தயாரிப்புக்கு மத்தியில், இந்த ரீரிலீஸ் பணிகளையும் சேர்த்துச் செய்து வருகிறேன். எல்லாவற்றுக்கும் 'சச்சின்' கொடுத்த உற்சாகமே காரணம்.
இது ரசிகர்களுக்கு, தங்களுக்குப் பிடித்த படங்களை மீண்டும் திரையரங்கில் உற்சாகமாகப் பார்க்கச் சரியான வாய்ப்பு.
நவீன திரையரங்குகளில் இந்தப் படங்களைப் புத்தம் புதியதாக உணர முடியும்" என்று உற்சாகமாகப் பேசினார் தயாரிப்பாளர் தாணு.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...