கூட்டுக் குடிநீா் திட்டம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு மக்களுக்கு குடிநீா் வ...
Ajith Kumar : 'அப்பா நீங்கள் இப்போது இருந்திருக்க வேண்டும்..' - அஜித் நெகிழ்ச்சி
நடிகர் அஜித்துக்கு மத்திய அரசின் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அஜித் உணர்வுப்பூர்வமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அஜித் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'இந்தியாவின் குடியரசு தலைவரிடமிருந்து மதிப்புமிக்க பத்ம பூஷண் விருதை பணிவோடும் பெருமையோடும் ஏற்றுக்கொள்கிறேன். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இதயப்பூர்வமான நன்றிகள். இப்படி ஒரு உயரிய விருதுக்கு பரிசீலிக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன். தேசத்துக்கான என்னுடைய பணிகள் அங்கீகரிக்கப்பட்டதற்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.
இது தனிப்பட்ட என்னுடைய உழைப்புக்கு கிடைத்த கௌரவம் அல்ல. இது ஒரு கூட்டு உழைப்புக்கு கிடைத்த கௌரவம். திரைத்துறையினரை சேர்ந்த அனைவருக்குமே என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய சீனியர்களாக இருந்து எனக்கு வழிகாட்டி ஊக்கப்படுத்திய அனைவருக்குமே நன்றிகள்.
பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்து வரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வட்டாரத்திற்கும் பிஸ்டல் & ரைபிள் சூட்டிங் வட்டாரத்திற்கும் கூட நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவும் அன்பும்தான் என்னுடைய வலிமையாக இருந்திருக்கிறது. உங்களுக்கும் நன்றி. என்னுடைய தந்தை இந்தத் தருணத்தில் இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் அவருடைய ஆன்மாவும் எண்ணங்களும் நிறைந்திருப்பதில் அவர் பெருமைக் கொள்வார் என நினைக்கிறேன்.
ஷாலினி, உன்னுடனான எனது பந்தம்தான் என் வாழ்வில் மகிழ்ச்சியையும் வெற்றிக்கான வழியையும் காட்டியது. நீதான் என் வாழ்வின் ஒளி.
என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் எல்லாருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். உங்களின் அன்புதான் என்னுடைய இலக்கை நோக்கிய பயணத்திற்கான எரிசக்தியாக இருந்திருக்கிறது. இந்த விருது உங்களுடையதும் கூட.
மீண்டும் இப்படி ஒரு கௌரவித்திற்கு பெரிய நன்றியை சொல்லிக்கொள்கிறேன். என்னுடைய பணிகளில் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயல்பட விரும்புகிறேன். உங்களுடைய பயணங்களும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.' என கூறியிருக்கிறார்.