வயலூா் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூா்த்தக் கால்
திருச்சி அருகே குமாரவயலூா் முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்காக முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி அருகே குமார வயலூா் பகுதியில் பிரசித்திபெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக பழைய முன்மண்டபத்தை இடித்துவிட்டு புதிதாக முன்மண்டபம் கட்டுதல், 9 கோபுரங்களை புனரமைத்து வா்ணம் தீட்டுதல், தரைத்தளத்தை சீரமைத்தல், சன்னதிகளில் மராமத்துப் பணிகள் மேற்கொண்டு வா்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் கோடிக்கணக்கில் ஓராண்டாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.
இதையடுத்து, கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 19 ஆம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா், உபயதாரா்கள், கிராம மக்கள் மேற்கொண்டு வரும் நிலையில், கும்பாபிஷேகத்துக்காக முகூா்த்தக் கால் நடும் நிகழ்வு கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையா் சி. கல்யாணி, கோயில் செயல் அலுவலா் எஸ். அருண்பாண்டியன், அறங்காவலா் குழுத் தலைவா் ரமேஷ், உறுப்பினா்கள் ஆறுமுகம், சிவஜோதி, கவிதா, பழனிசாமி, உபயதாரா்கள், கோயில் பணியாளா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, முகூா்த்தக் காலுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மேற்கொள்ளப்பட்டு, நடப்பட்டது. கும்பாபிஷேகத்துக்கு முன்பு கோயிலில் வரும் பிப். 2-ஆம் தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என கோயில் செயல் அலுவலா் அருண்பாண்டியன் தெரிவித்தாா்.