Allu Arjun: ``நான் நடிச்சதுல 18 படம் பாக்ஸ் ஆபிஸ்ல..'' - அல்லு அர்ஜுன் ஓப்பன் டாக்
'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குநர் அட்லியுடன் இணைந்திருக்கிறார்.
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், World Audio Visual and Entertainment (Waves) மாநாட்டில் அல்லு அர்ஜுன் அவரது படங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், "நான் நடித்த படங்களில் 18 படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் தோல்வியைத் தழுவி இருக்கின்றன.
அந்தப் படங்கள் நன்றாக ஓடவில்லை. அதனால் ஆறு அல்லது ஏழு மாதங்கள் ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் படங்களில் நடிக்கலாம் என்று நினைத்தேன்.
ஆனால் அந்த ஓய்வு காலம் ஒரு வருடம் ஆகிவிட்டது. அந்த சமயங்களில் நான் நிறைய சிந்தித்தேன்.
உண்மையில் அந்த ஒரு வருட ஓய்வு என் மிகச்சிறந்த ஓய்வுகளில் ஒன்றாக இருந்தது. அந்த ஓய்வுக்கு பிறகு ‘அலா வைகுந்தபுரமுலு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
அந்தப் படம் எனக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

தெலுங்கு திரைப்படங்களிலேயே மிகப்பெரிய ஹிட் திரைப்படங்களில் ஒன்றாக அந்தத் திரைப்படம் இடம்பெற்றது.
அதன் பிறகுதான் ‘புஷ்பா, புஷ்பா 2’ பட வாய்ப்பு வந்தது. அந்த ஒரு வருட ஓய்வுதான் என்னை சுயபரிசோதனை செய்துகொள்ள உதவியாக இருந்தது ” என்று கூறியிருக்கிறார்.