எல்லைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியர் கைது!
எல்லைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று (மே 5) கைது செய்தனர்.
இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி கூறியதாவது, ''எல்லைப் பகுதிகளில் மே 3 - 4 தேதி (நள்ளிரவு) வீரர்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் நுழைந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை வீரர்கள் கைது செய்து பஞ்சாப் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது'' எனக் குறிப்பிட்டார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் உத்தரவுகளையும் மத்திய அரசு பிறப்பித்து வருகிறது.
எல்லைகளில் ஆயுத சோதனை, பயிற்சியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருவதால், எந்த நேரத்திலும் தாக்குதலுக்குத் தயாராகவுள்ளதை பிரகடனப்படுத்தி வருகிறது. இந்தியா சார்பிலும் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வரும் 7ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஜம்மு - காஷ்மீர் என இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லைகளில் (3,323 கி.மீ.) கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக இந்த எல்லைப் பகுதிகள் மேலும் பதற்றம் நிறைந்ததாகக் காணப்படுகிறது.
கடந்த மாதம் 23ஆம் தேதி இந்தியாவைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர், தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் (ஃபெரோஸ்பூர்) நுழைந்ததற்காக அந்நாட்டு வீரர்களால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் எல்லை ரோந்துப் பணிகளின்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, பஞ்சாப் எல்லையில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காகவே அந்த வீரர் சென்றதாகவும், எதேர்ச்சையாக எந்தவித உள் நோக்கமுமின்றி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் பதற்றமான சூழல் நிலவிவரும் இக்காலகட்டத்தில் எல்லையோர விவசாயப் பணிகளில் ஈடுபடுபவர்களும் கூடுதல் கவனத்துடன் இருக்க பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிக்க | மே 7 அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை: மத்திய அரசு