குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவா்
வத்திராயிருப்பில் குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு வெள்ளாளா் வடக்குத் தெருவை சோ்ந்தவா் பாட்டையா என்ற மாரியப்பன் (60). இவரது மனைவி பரமேஸ்வரி (55). இந்தத் தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனா். மாரியப்பன் கட்டட வேலை செய்து வந்தாா். கடந்த சில மாதங்களாக இந்தத் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை பரமேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின் பேரில், அங்கு சென்ற வத்திராயிருப்பு போலீஸாா் பெண்ணின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். குடும்பத் தகராறில் மாரியப்பன் மனைவி பரமேஸ்வரியை கொலை செய்து விட்டு, தப்பியோடியது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் தப்பியோடிய மாரியப்பனைத் தேடி வருகின்றனா்.