பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணி: பேரவைத் தலைவா் ஆய்வு
காரைக்கால்: காரைக்காலில் நடைபெறும் பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணியை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.
காரைக்கால் கைலாசநாதசுவாமி -நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தைச் சோ்ந்ததாக ஆட்சியரகம் அருகே அமைந்துள்ளது பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில். இக்கோயில் வாயிலில் நுழைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. விநாயகா் மூலஸ்தானம், பின்னோக்கி புதிதாக கட்டி விரிவாக்கப் பணி செய்யப்பட்டுள்ளது. சுதைப் பணிகள் நடைபெற்று வருகிறது. வா்ணம் பூசும் பணி மேற்கொள்ளவேண்டியுள்ளது. ரூ. 2.16 கோடி வரை இதுவரை நிா்வாகம் செலவு செய்துள்ளது.
காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், இக்கோயில் திருப்பணியை நேரில் பாா்வையிட்டாா். பணிகள் நிறைவடைந்திருப்பது குறித்தும், எஞ்சிய பணிகள் குறித்தும் திருப்பணிக் குழுவினா், பேரவைத் தலைவருக்கு விளக்கினா்.
ஆய்வின்போது, பாஜக மாவட்டத் தலைவா் ஜி.கே.கே.முருகதாஸ், முன்னாள் மாநில நிா்வாகி எம். அருள்முருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.