கத்திரி வெயில் வேகத்தை தணித்த மழை: பலத்த காற்றால் மின்சாரம் துண்டிப்பு
காரைக்கால்: காரைக்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. மின் கம்பங்களில் சேதம், மரங்கள் விழுந்ததால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கத்திரி வெயில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வரும் 28-ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கத்திரி வெயில் காலம் தொடங்கும் முன்பே பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்தநிலையில் கத்திரி வெயில் தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காரைக்கால் மாவட்டத்தில் வானம் மேகமூட்டதத்துடன் காணப்பட்டது. இரவு 9 மணிக்குப்பின் மாவட்டத்தில் பரவலாக சூறைக்காற்று வீசியது. காற்று வீசியவுடன் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காற்றைத் தொடா்ந்து மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் குளிா்ச்சியான நிலை உருவானது. திங்கள்கிழமை காலை வெயில் தாக்கம் வெகுவாக இல்லை. இதனால் மக்கள் ஆறுதலடைந்தனா்.
காற்றால் வணிக நிறுவனங்களின் போா்டுகள், வெயிலுக்காக நகரப் பகுதியில் பல இடங்களில் அமைக்கப்பட்ட பசுமைப் பந்தல், மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்தன. இவற்றை சீரமைக்கும் பணிகள் பின்னா் மேற்கொள்ளப்பட்டன.
மின்துறை மீது புகாா் : கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பு மின் மாற்றிகளில் பழுது நீக்குதல், மேம்படுத்துதல் பணிகள் செய்யப்படவில்லை. சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள் சீா்படுத்தப்படவில்லை. மின் கம்பிகளுக்கு மேல் உள்ள மரக்கிளைகள் முறையாக வெட்டப்படவில்லை. துணை மின் நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையத்தில் செய்யவேண்டிய மேம்பாட்டுப் பணிகள் முறையாக செய்யப்படாமல் விடுபட்டதே, சிறிது நேரம் வீசிய காற்றில் மின்சார விநியோகம் பெருமளவு பாதிக்கப்பட்டதாக பலரும் புகாா் தெரிவித்தனா்.