HIT 3 Review: ஒரு கன்டெய்னர் துப்பாக்கி; 2 லாரி கத்தி; பல லிட்டர் ரத்தம்; ஹிட்டடிக்கிறதா இந்த ஹிட்?
அர்ஜுன் சர்கார் (நானி), விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்ட்ரிட்டான போலீஸ் அதிகாரி. இவர் HIT என்கிற Homicide Intervention Team என்கிற குற்றவாளிகளைத் தண்டிக்கும் சிறப்பு புலனாய்வுப் படையிலும் இருக்கிறார்.
ஒரு கொடூரமான கொலை வழக்கை விசாரிக்க காஷ்மீருக்குச் செல்லும் அவர், அது ஒரு கொலை மட்டுமல்ல, நாடு முழுவதும் ஒரே மாதிரியாக 13 கொலைகள் நடந்திருக்கின்றன என்பதைக் கண்டறிகிறார்.
அங்கிருந்து டார்க் வெப் என்கிற இருண்ட வலைப்பின்னல்களுக்குப் பின்னால் ஒரு குற்றக் கும்பல் இருப்பது தெரிகிறது. அர்ஜுன் இந்த மர்மத்தை எப்படி அவிழ்கிறார் என்பதை ஒரு கன்டெய்னர் துப்பாக்கி, ரெண்டு லாரி கத்தி, பல லிட்டர் ரத்தத்தை வைத்துச் சொல்லியிருப்பதே இந்த HIT 3 படத்தின் கதை.

ஆக்ரோஷமான நடிப்பு, உடல் மொழி, வசன உச்சரிப்பு என்று ஒரு பக்கா மாஸ் ஹீரோவாகப் படத்தின் தூணாக மாறியிருக்கிறார் நானி.
டாக்ஸிக் மாஸ்குலைன் மீட்டரில் ஒரு நல்ல ஹீரோ என்ற இயக்குநரின் நோக்கத்துக்குத் தகுந்தவாறு சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
ஆக்ஷன் காட்சிகளில் திரையில் கத்தி, துப்பாக்கி என்று பப்ஜி விளையாடியிருக்கிறார். ஆரம்பத்தில் காதல் நாயகியாக வரும் ஸ்ரீநிதி ஷெட்டி, இரண்டாம் பாதியில் சில ஆக்ஷன் காட்சிகளில் ஆச்சரியப்படுத்தினாலும், ஒட்டுமொத்த கதையில் அலங்காரப் பொருளாகவே இருக்கிறார்.
வில்லனாக வரும் பிரதீக் பப்பரின் கதாபாத்திரம் பின்னப்பட்ட அளவுக்கு அவரது நடிப்பு மிரட்டவில்லை.
இதுதவிர, ராவ் ரமேஷ், சமுத்திரக்கனி ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட திரைநேரத்தில் சிறப்பான பங்களிப்பைச் செய்கிறார்கள்.
அதேபோல, இறுதியில் வரும் கேமியோக்கள் ரசிகர்களுக்கு ஒரு சிறிய விருந்து படைக்கின்றன.
காஷ்மீரின் இயற்கை அழகையும், ஆக்ஷனின் தீவிரத்தையும் அழகாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ்.
குறிப்பாக, பாழடைந்த பங்களாவுக்குள் கொலை விளையாட்டுகள் விளையாடும் பாணியிலான செட் டிசைன்கள் விஷுவலாக மிரட்டுகின்றன.
மிக்கி ஜே. மேயரின் பின்னணி இசை முதல் பாதியில் சுமாராக இருந்தாலும், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது.
அதேபோல, பாடல்கள் நன்றாக இருந்தாலும், திரைக்கதைக்கு வேகத்தடைகளே.
படத்தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீநிவாஸ் காதல் காட்சிகளையும், சில ஆக்ஷன் பகுதிகளையும் இன்னும் குறைத்திருக்கலாம்.
இருப்பினும், ஒளிப்பதிவு கோணங்களைச் சிறப்பாகவே தேர்வு செய்திருக்கிறார். அது ஆக்ஷன் காட்சிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

படம் ஆரம்பிக்கும்போது, முதல் இரண்டு பாகங்களைப் போல ஒரு பரபரப்பான த்ரில்லராகவே ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலானு.
ஆனால் சிறிது நேரத்திலேயே யூ-டர்ன் எடுத்து ஆக்ஷன் த்ரில்லராக மாறுகிறது.
இதனால் ஆரம்பத்தில் வந்த த்ரில்லரின் ஆழமும் பரபரப்பும் கொஞ்சம் குறைந்துவிடுகிறது.
காஷ்மீரின் மலையில் ஏறினாலும், திரைக்கதையின் வேகம் மட்டும் சற்றும் குறையாமல் பார்த்துக்கொண்டுள்ளார் இயக்குநர்.
இருப்பினும் காதல் கதை, பாடல்களும் கதையின் வேகத்தைக் குறைக்கின்றன.
அதீத போலீஸ் புகழ் பாடல், போலீஸ் வன்முறைகளை நியாயப்படுத்துவது ஆகியவைத் திரைக்கதையைப் பல இடங்களில் ராங் ரூட்டில் ஆக்ஸலரேட்டரை அழுத்தியிருக்கின்றன.
அதேபோல, காஷ்மீரில் நடக்கும் ஆஸாதி குழுக்களின் அரசியல், மாவோயிஸ்ட் அரசியல் ஆகியவற்றை மேலோட்டமாகத் தொட்டு, படத்துக்குத் தேவையே இல்லாத ஆணியை வம்படியாக அடித்து இஸ்லாமிய வெறுப்பைத் தூவியிருப்பது கண்டனத்துக்கு உரியது.

இதைத் தவிர்த்து, இருண்ட வலைகளில் பின்னப்பட்ட மர்மமான வழக்கின் பாதை நம்மைக் கட்டிப்போட்டே வைத்திருக்கிறது.
நானிக்கு ஆங்காங்கே வைக்கப்பட்ட வசனங்கள் பட்டாசாகத் திரையரங்கில் வெடித்திருக்கின்றன.
குறிப்பாக அவரது திரைத்துறை என்ட்ரி குறித்த ரெபரென்ஸ்களுக்கு விசில் பறக்கிறது.
ஹாலிவுட் படங்களான ஜான் விக், ஸ்க்விட் கேம், ராங் டர்ன் போன்ற படங்களின் தாக்கம் அதீத வன்முறைக் காட்சிகளில் வெளிப்படுகிறது.
இந்த அதிகப்படியான வன்முறையும், ரத்தமும் சிலருக்குப் பிடிக்கலாம், சிலருக்குச் சங்கடத்தையும் ஏற்படுத்தலாம்.
கிளைமாக்ஸில் வரும் ஆக்ஷன் காட்சிகளும், கேமியோக்களும் ரசிகர்களுக்கு ஒரு உற்சாக மொமென்ட் கொடுத்து வழியனுப்புகின்றன.
அடுத்த பாகத்துக்கு வைக்கப்பட்ட லீடும் பக்காவான தியேட்டர் மெட்டிரியல்.

மொத்தத்தில் போலீஸ் வன்முறையை நியாயப்படுத்தல், அரசியல் பிழைகள் ஆகியவை எட்டிப் பார்த்தாலும், நானியின் சிறப்பான நடிப்பு, தொழில்நுட்ப ரீதியாக அதிரடி என விளையாடியிருக்கும் இந்த ‘ஹிட் 3’ சிக்ஸர் அடிக்காவிட்டாலும் வெற்றிக்கான ரன்களைச் சேர்த்திருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...