America: 'கொலம்பியா மக்களை போலவா?!' - 200-க்கும் மேற்பட்ட இந்தியர்களை வெளியேற்றிய அமெரிக்கா
'சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் குடியேறி இருப்பவர்களை வெளியேற்றுவேன்' என்று ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் கூறிய உறுதிமொழியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.
கொலம்பியா, மெக்சிகோ, கனடா என்று நீண்டுக்கொண்டிருக்கும் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய வெளிநாட்டு மக்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வருகிறது அமெரிக்கா.
தற்போது 200-க்கும் மேற்பட்ட அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களை ட்ரம்பின் அரசு சி17 என்னும் ராணுவ விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது. இது பிரச்னை அல்ல... ஆனால், இதைப்பற்றி இந்திய அதிகாரிகளுக்கு அதிகாரபூர்வமாக எந்தத் தகவலுமே தராமல் அனுப்பியுள்ளது தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
'அமெரிக்க அரசு கடுமையாக தங்களது குடியேற்ற சட்டங்களை பின்பற்றி வருகிறது. அதனால் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றுகிறது' என்று இந்தியர்களை அனுப்பியது தொடர்பாக எதுவும் சொல்லாமல், அமெரிக்க தூதரகம் இப்படி மட்டும் குறிப்பிட்டுள்ளது.
'அமெரிக்கா அனுப்புபவர்களை 'இந்தியர் தானா?' என்று அடையாளப்படுத்தியப் பின், அவர்களை ஏற்றுகொள்வதில் இந்தியா தயாராக இருக்கிறது' என்று இந்திய அரசு தரப்பு கூறுகிறது.
அமெரிக்கா அனுப்பி இருக்கும் இந்தியர்கள் இன்று காலைக்குள் பஞ்சாப் விமான நிலையத்திற்கு வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம், கொலம்பியாவிற்கு அனுப்பப்பட்ட அந்நாட்டு மக்கள் ராணுவ விமானத்தில் ஏ.சி, தண்ணீர் எதுவும் இல்லாமல், கைவிலங்கிட்டு அனுப்பப்பட்டிருந்தனர். இதற்கு கொலம்பியா அரசு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்திருந்தது.
தற்போது, இந்தியர்களையும் ராணுவ விமானத்தில் தான் வெளியேற்றியுள்ளது அமெரிக்க அரசு. ஆனால், இந்தியர்களை எப்படி அவர்கள் அனுப்பியிருக்கிறார்கள், கண்ணியமாக நடத்தி இருக்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ள, இந்த சம்பவத்தை இந்திய அரசு உற்றுநோக்கி வருகிறது.