Ananya: `படிப்பு முக்கியம்; ஐ.ஏ.எஸ் ஆகணும்!' - சுப்ரீம் கோர்டை திரும்பி பார்க்க வைத்த 8 வயது சிறுமி!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த அனன்யா என்ற சிறுமியின் வீடு இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, தனது இல்லத்திலிருந்து புத்தகங்களை எடுத்துக் கொண்டு ஓடும் காணொளி சமூக வலைதளப் பக்கங்களில் தற்போது வைரலாகியிருக்கிறது.
இந்தக் காணொளியை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
கடந்த மார்ச் 21-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்திலுள்ள அரைப் பகுதியில் சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு எனக் கூறி அங்கிருந்த குடிசைகளை இடிக்க மாவட்ட அதிகாரிகளும், பணியாளர்களும் வந்திருக்கிறார்கள். அப்போது திடீரென அந்தக் குடிசைகளில் தீ பற்றியிருக்கிறது. அதனை கண்டவுடன் உடனடியாக ஓடிச் சென்று தனது புத்தகங்களை பத்திரப்படுத்தியிருக்கிறார் அனன்யா.
இந்த எட்டு வயது சிறுமியின் செயல் உச்சநீதிமன்றத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி பூயான்,`` சிறிய குடிசைகள் புல்டோசர்களால் இடிக்கப்படும் காணொளியை சமீபத்தில் பார்த்திருந்தேன். இடிக்கப்பட்டிருக்கும் இந்த குடிசைகளிலிருந்து ஒரு சிறுமி புத்தகங்களை ஏந்திக் கொண்டு ஓடும் காட்சியையும் பார்த்திருந்தேன். அது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வீடுகளை இப்படியான வகைகளில் இடிப்பது மனிதநேயமற்றது மற்றும் சட்டவிரோதமானது.

குடிமக்களின் குடியிருப்புகளை இப்படியான வகைகளில் இடிக்க முடியாது. இந்த மாவட்டத்தின் வளர்ச்சி ஆணையம் `வாழ்விட உரிமை' என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் ஒரு அங்கம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்." எனக் கூறியிருக்கிறார்.
மேலும், கடந்த செவ்வாய்கிழமை இடிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு ஆறு வார காலத்திற்குள் 10 லட்ச ரூபாயை இழப்பீடாக கொடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
செய்தியாளர்களிடம் இந்த சிறுமி பேசுகையில், `` ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. எங்கள் வீட்டின் அருகில் தீ பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. புல்டோசர்களும் எங்களின் குடிசைகளை இடிக்க முன் வந்துக் கொண்டிருந்தது. அதனால்தான் உடனடியாகச் சென்று எனது புத்தகங்களை நான் எடுத்துக் கொண்டு வந்தேன்." என்றார்.

இந்த சிறுமியின் தாத்தா ராம் மிலன் யாதவ், ``எதற்காக எங்களின் குடிசைகள் இடிக்கப்பட்டது என தெரியவில்லை. எங்களின் வீடுகளுக்கு எதிரே இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியை எங்களின் குழந்தைகள் அவமரியாதை செய்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அது முழுக்க முழுக்க பொய்யானது. அவருக்கு நாங்கள் எப்போதும் மரியாதை கொடுத்திருக்கிறோம். அவருக்குப் பதவி கிடைத்தபோது மலர் தூவி வாழ்த்தியிருக்கிறோம். ஆனால், அவர்களின் மனதில் என்ன இருக்கிறது என எனக்கு தெரியவில்லை." என தன்னுடைய வருத்தங்களை தெரிவித்திருந்தார்.
மற்றொரு பக்கம் ஜலால்பூர் தாலுகாவின் சப் டிவிஷனல் மேஜிஸ்டிரேட்டான பவன் ஜெய்ஸ்வல், `` இந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே இடத்தை காலி செய்யும்படி அறிக்கை கொடுத்திருந்தோம். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு குழு விரைந்தவுடன் அங்கிருந்த குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எப்படி தீ பற்றியது என எங்களுக்கு தெரியவில்லை. பிறகு அதையும் எங்களின் கட்டுக்குள் கொண்டு வந்தோம். தீ பற்றிய வீடுகளில் ஒன்றை நாங்கள் இடித்தோம். அது குடியிருப்பு இல்லாத வீடுதான்." எனக் கூறியிருக்கிறார்.