ஆதிதிராவிட தொழில்முனைவோருக்கு ரூ. 160 கோடி மானியம்: தமிழக அரசு
Ashwin: "இக்கட்டான தருணங்களில் கூட..." - அஷ்வினுக்கு உருக்கமாகக் கடிதம் எழுதிய மோடி
நடந்துகொண்டிருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் மூன்றாவது டெஸ்ட் மழை பாதிப்பால் டிராவில் முடிந்திருக்கிறது. இந்நிலையில் திடீரென தன் ஓய்வை அறிவித்திருந்தார் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரவிச்சந்திரன் அஷ்வின்.
"கேரம் பால்"அஷ்வின் என்று அழைக்கப்படும் இவர், மூத்த வீரர்களான சச்சின், டிராவிட் அவர்களுக்கு அடுத்து ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்ற ஒரே இந்திய வீரர். கேரம்பால் வீசுவதில் உலகில் இருக்கும் இருவரில் இவரும் ஒருவர்.
அஷ்வினின் இந்த விலகல் முடிவு குறித்துப் பல்வேறு விவாதங்கள் கிளம்பியிருக்கும் நிலையில், பிரதமர் மோடி கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ``இந்தக் கடிதம் நீங்கள் ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் இருக்கும் நிலையில் உங்களை வந்து சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உங்கள் ஓய்வு அறிவிப்பு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இன்னும் பல ஆஃப்-பிரேக்குகளை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், நீங்கள் கேரம் பாலை எங்களை நோக்கி வீசியிருக்கிறீர்கள். இந்தியாவுக்காகச் சிறப்பாக விளையாடிய வீரராக உங்களின் இந்த முடிவு, உங்களுக்கும் கடினமான ஒன்றாகவே இருந்திருக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்கிறோம். புத்திக்கூர்மையுடனும், கடின உழைப்புடனும் உங்களின் செயல்பாடுகளுக்காகவும், குறிப்பாக நமது அணியை நிலைநிறுத்தியதற்காகவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நீங்கள் விடைபெறுவதால், ஜெர்சி எண் 99-ஐ மிஸ் செய்வோம். நீங்கள் பந்துவீசுவதற்குத் தயாராகும்போது வரும் அந்த எதிர்பார்ப்பு உணர்வை, கிரிக்கெட் ரசிகர்கள் இழக்க நேரிடும். நீங்கள் மைதானத்தில் இருக்கும்போதெல்லாம் எந்த நேரத்திலும் எதிரணியைச் சிக்க வைக்கும் வலையைப் பின்னுவீர்கள் என்ற உணர்வு இருந்தது. ஆஃப்-ஸ்பின் மட்டுமல்லாமல் புதுமையான பந்துவீச்சுகள் மூலம் பேட்ஸ்மேன்களை திணறவைக்கும் திறமையைப் பெற்றிருக்கிறீர்கள்.
நீங்கள் இதுவரை குவித்திருக்கும் 765 சர்வதேச விக்கெட்டுகளில் ஒவ்வொன்றும் முக்கியத்துவமானது. டெஸ்ட் போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான தொடர் நாயகன் விருதுகளைப் பெற்றவர் என்ற சாதனை, கடந்த பல ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில், அணியின் வெற்றியில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைக் காட்டுகிறது.
டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியபோது, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, 2011-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி ஓவரில் நீங்கள் அணியை வெற்றிபெறச் செய்து, ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்தீர்கள். 2013-ல் நீங்கள் அணியின் முக்கிய நபராகவே மாறியிருந்தீர்கள். பல வெற்றிகள் மூலம் அணியில் மூத்தவராக முக்கிய பங்கு வகித்தீர்கள். ஐசிசியின் சிறந்த வீரராகச் சர்வதேச அங்கீகாரத்தையும், உலகளாவிய மரியாதையையும் பெற்றுள்ளீர்கள்.
பலமுறை ஒரே போட்டியில் சதம் அடித்து, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி உங்களின் ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தினீர்கள். 2021-ல் சிட்னியில் நடந்த துணிச்சலான மேட்ச்-சேவிங் இன்னிங்ஸ் உட்படப் பல நினைவுகளைத் தேசத்திற்கு வழங்கியிருக்கிறீர்கள்.
2022-ம் ஆண்டு T20 போட்டியில் உங்களின் தனிச்சிறப்பான ஆட்டம் நினைவுகூரத்தக்கது. உங்கள் தாயார் மருத்துவமனையில் இருந்தபோதும் அணிக்குப் பங்களிக்க வந்து நின்ற விதம், சென்னை வெள்ளத்தின் போது உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் தொடர்புகொள்ள முடியாதபோதும்கூட தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நீங்கள் விளையாடிய அந்த நேரம் என இக்கட்டான தருணங்களில் கூட, உங்கள் நேர்மை மற்றும் அர்ப்பணிப்புதான் முன்னின்றது. அதை எப்போதும் நினைவில் கொள்கிறோம்.
விளையாட்டின் பல்வேறு மாறுதலுக்கு ஏற்ப உங்கள் அணுகுமுறையை நீங்கள் வடிவமைத்த விதம், இந்திய அணிக்கு ஒரு சொத்தாகவே மாறியிருக்கிறது. ஒரு பொறியியலாளரான உங்களுக்கு, நீங்கள் பெற்ற கல்வி, நுட்பமான அணுகுமுறையில் உங்களுக்கு உதவியதோ என்று எனக்கு எப்போதும் தோன்றும். உங்களின் கிரிக்கெட் அறிவைப் பல ஆய்வாளர்கள், நண்பர்கள் பாராட்டியுள்ளனர். இதுபோன்ற அறிவு எதிர்கால சந்ததியினருக்குப் பயன்படும் என்று நான் நம்புகிறேன்.
உங்கள் உரையாடல்களில் நீங்கள் கொண்டு வரும் புத்திசாலித்தனம், அரவணைப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. எனவே, கிரிக்கெட், விளையாட்டு, பொதுவாக வாழ்க்கை பற்றிய 'குட்டி கதைகளை' தொடர்ந்து பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேவும் விளையாட்டின் தூதராக நீங்கள் நாட்டையும் உங்கள் குடும்பத்தையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.
உங்கள் பெற்றோர், உங்கள் மனைவி பிரித்தி மற்றும் உங்கள் மகள்களையும் வாழ்த்துவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறேன். அவர்களின் தியாகம், ஆதரவு, ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நபராகவும் உங்கள் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருந்திருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இனி நீங்கள் அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள் என்றும் நம்புகிறேன். இத்தனை வருடங்களாக நீங்கள் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்திருப்பீர்கள். நீங்கள் மிகவும் விரும்பும் விளையாட்டில் தொடர்ந்து பங்களிப்பதற்கான வழிகளை விரைவில் கண்டறிய எனது வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...