டொனால்டு டிரம்ப் வெற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிப்பு: ஜன.20 பதவியேற்பு...
AUSvIND: மீண்டும் சொதப்பிய இந்திய பேட்டர்கள்; ஃபயர் மோடில் பும்ரா - Day 1 Full Review
பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டியான சிட்னி டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. சிட்னியில் டாஸ் போடப்படுவதற்கு முன்பே இந்த டெஸ்ட்டின் மீது அதீத எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. காரணம், தோல்விகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு கேப்டன் ரோஹித் தாமாக முன்வந்து இந்தப் போட்டியிலிருந்து விலகியிருந்தார்.
பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். ஆனாலும் எந்த மாற்றமும் இல்லை. இந்தப் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சொதப்பலாகவே ஆடியிருக்கிறது. மீண்டும் இந்திய பேட்டர்கள் ஏமாற்றமளித்திருக்கின்றனர். முதல் நாள் ஆட்டத்தில் என்ன நடந்தது?
பலத்த நெருக்கடிக்கும் அழுத்தத்துக்கும் மத்தியில் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்த பும்ராதான் டாஸை வென்றிருந்தார். சிட்னி பிட்ச் எப்போதும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கக்கூடியது என்பதால் முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். கூடவே, 'நாங்கள் அணியாக ஒன்றாக இருக்கிறோம். அணியில் யாருமே சுயநலமாக யோசிப்பதில்லை.' என சுயவிளக்கத்தையும் கூறிவிட்டுச் சென்றார்.
இந்திய அணியும் பேட்டிங்கைத் தொடங்கியது. கடந்த போட்டிகளைப் போல அல்லாமல் இந்திய அணியின் பேட்டர்கள் பொறுப்போடு ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ராகுல் இந்த முறை ஓப்பனிங் இறங்கியிருந்தார். முதல் 10 ஓவர்களை கூட இந்த ஓப்பனிங் கூட்டணி கடக்க முடியவில்லை. ஸ்டார்க்கும் போலண்ட்டும் வீசிய முதல் ஸ்பெல்லிலேயே இவர்களின் விக்கெட்டை வீழ்த்தினர். ஜெய்ஸ்வால், ராகுல் என இருவருமே தற்காப்பாக ஆடுவதில் வல்லவர்கள் என்பதால், ஆரம்பத்திலிருந்தே இருவரையும் பந்தை லீவ் செய்ய விடாமல் ஆட வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். இதனால் பந்தை ஃபுல்லாகவும் லெக் ஸ்டம்ப் லைனிலும் தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தனர். இதற்குப் பலனும் கிடைத்தது. ஸ்டார்க் டைட்டாக வீசிய பந்தை லெக் சைடில் ப்ளிக் செய்ய முயன்று ஷார்ட் ஸ்கொயர் லெகில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அதேமாதிரி, போலண்ட் லெக் ஸ்டம்ப் லைனில் குட் லெந்தில் வீசிய பந்தை காலை விலக்கி ஆட முயன்ற ஜெய்ஸ்வால் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். ஜெய்ஸ்வால் 10 ரன்களையும் ராகுல் 4 ரன்களையும் எடுத்திருந்தனர். இதன்பின் விராட் கோலியும் கில்லும் கைகோத்தனர்.
கோலிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ஷ்டம் அடித்தது. போலண்ட் வீச கோலி எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஸ்லிப்பில் கேட்ச் ஆகியிருந்தார். ஆனால், ஸ்லிப்பில் நின்று கேட்ச் பிடிக்கையில் ஸ்மித்தின் கையிலிருந்து நழுவிப் பந்து தரையில் படுவது தெரிந்தது. இதனால் கோலிக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பைக் கோலி நன்றாகப் பயன்படுத்திக் கொண்டதைப் போலத்தான் ஆரம்பத்தில் தெரிந்தது. ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில் அவுட் ஆவதை தவிர்க்க கோலி டெக்னிக்கலாலவும் சில மாற்றங்களோடு வந்திருந்தார்.
கடந்த இன்னிங்ஸ்களில் மிடில் & லெக்கில் ஓப்பனாக ஸ்டாண்ட்ஸ் எடுத்து நின்ற கோலி, இந்த இன்னிங்ஸில் அதே மிடில் & லெக் ஸ்டம்ப்ஸில் க்ளோஸாக ஸ்டாண்ட்ஸ் எடுத்து நின்றார். இதன் மூலம் ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை கொஞ்சம் திடகாத்திரமாகவே எதிர்கொண்டார். சில சிக்கலான பந்துகளை லீவும் செய்தார். ஆனால், இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கோலியை அப்படியே வைத்துவிட்டு கில்லுக்கு செல்வோம். கில்லும் நின்று நிதானமாக நன்றாகவே ஆடிக்கொண்டிருந்தார். இந்தத் தொடரில் இந்திய பேட்டர்கள் அடிப்படையான சில விஷயங்களில் கோட்டை விடுகின்றனர். 'Game Awareness' இல்லாமல் ஆடி வருகின்றனர். இந்திய அணியின் சொதப்பல்களுக்கு இது மிக முக்கிய காரணமாக இருந்தது. இன்று கில் அவுட் ஆன விதமே அதற்கு உதாரணம். முதல் செஷனின் கடைசிப் பந்தில் அதாவது, உணவு இடைவேளைக்கு முன்பான கடைசிப் பந்தில் அவுட் ஆனார். லயன் வீச இறங்கி வந்து ஆடுகிறேன் என எட்ஜ் வாங்கி ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். அவர் அவுட் ஆன உடனே உணவு இடைவேளை.
இப்படியொரு சமயத்தில் விக்கெட்டை விடுவதெல்லாம் அநியாயம். கடந்த போட்டியிலும் ஒரு இன்னிங்ஸில் கோலி இப்படித்தான் இடைவேளைக்கு ஒரு ஓவருக்கு முன்பாக ஆப் ஸ்டம்புக்கு வெளியே பேட்டை விட்டு அவுட் ஆகியிருந்தார். எதுவுமே செய்யாமல் ஒன்றிரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்திருந்தால் விக்கெட்டைக் காத்திருக்க முடியும். அந்த Awareness கூட இந்திய வீரர்களுக்கு இல்லை.
68 பந்துகளை பொறுமையாக தட்டி உருட்டி ஆடிய கோலி, போலண்ட் வீச அவர் எதிர்கொண்ட 69 வது பந்தில் வழக்கம்போல அவர் பாணியில் ஆப் ஸ்டம்புக்கு வெளியே பேட்டை விட்டு அவுட் ஆனார். இந்தத் தொடரில் மட்டும் 7 வது முறையாக இப்படி அவுட் ஆகியிருந்தார். கோலி 17 ரன்களில் வெளியேற இந்திய அணி 72-4 என பரிதாபமான நிலைக்கு சென்றது. ரிஷப் பண்ட் மட்டும்தான் கொஞ்ச நேரம் நின்று எதோ சுமாரான ஸ்கோரை எடுக்க உதவினார். சாகச மனப்பான்மையோடு ஆடுவதுதான் பண்ட்டின் பாணி. ஆனாலும் அணியின் தேவையைப் புரிந்துகொண்டு தற்காப்பான ஆட்டத்தை ஆட முயல்கிறார். பெரிய ஷாட்கள் எதையும் முயற்சி செய்யாமல் ஏதுவான பந்துகளை மட்டும் தட்டிவிட்டு சிங்கிள் எடுத்து வந்தார். கடந்த போட்டியிலும் இப்படியொரு இன்னிங்ஸை ஆடியிருந்தார். ஆனால், பிரச்சனை எங்கே வருகிறதென்றால் பண்ட்டால் நீண்ட நேரத்திற்கு நிதானமாக இருக்க முடியவில்லை. கடந்த போட்டியில் ஒரு செஷன் முழுக்க அமைதியாக இருந்தார். இந்தப் போட்டியிலும் 97 பந்துகளுக்கு அமைதியாக இருந்தார். அவரின் பொறுமையை சோதிக்கும் வகையில் போலண்ட்டால் வீசப்பட்ட ஷார்ட் பிட்ச் பந்தை அடிக்க முயன்று வட்டத்திற்குள்ளேயே கேட்ச் ஆகி 40 ரன்களில் வெளியேறினார்.
ஹெட் வீசிய அந்த ஒரு ஓவர், போலண்ட் வீசிய அந்த ஒரு ஷார்ட் பால் என இப்படித்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டருக்கு ஆசையைத் தூண்டும் வகையில் தூண்டில் போடுவார்கள். அதிலும் பொறுமையாக இருப்பதுதான் பெரிய இன்னிங்ஸை ஆடுவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும். பண்ட் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும். நீண்ட நேரமாக நின்று விக்கெட்டை காத்த ஜடேஜாவும் 26 ரன்களில் ஸ்டார்க்கின் பந்தில் lbw ஆகி வெளியேறினார். இதன்பிறகு யாரும் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. பும்ரா மட்டும் பவுண்டரிகளையும் சிக்சரையும் அடித்து 22 ரன்களை எடுத்தார். இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எத்தனையோ மாற்றங்களுக்குப் பிறகும் இந்திய அணியின் பேட்டர்கள் சோபிக்க மறுப்பது வேதனையே.
முதல் நாள் முடிய கடைசி 15 நிமிடங்கள் இருக்கையில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை தொடங்கியது. பும்ரா கவாஜாவின் விக்கெட்டை எடுக்க அத்தோடு முதல் நாள் முடிந்தது.
ஆஸ்திரேலியா அணி 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. நாளை ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை இந்திய அணி வேகமாக வீழ்த்த வேண்டும். 50 ரன்களுக்கு மேல் லீட் கொடுத்தாலே இந்திய அணிக்கு ஆபத்துதான். என்ன நடக்கிறதென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்திய பேட்டிங்கின் இந்த தொடர் சொதப்பல்களுக்கு என்ன காரணம் என நீங்கள் நினைக்கிறீர்கள் கமென்ட்டில் சொல்லுங்கள்