BB Tamil 8: "40 நிமிஷம் அதைமட்டுமே பேசிட்டு இருந்தாரு..."- கொதித்த அர்ச்சனா காரணம் என்ன?
கடந்த சீசன் டைட்டில் வின்னரான அர்ச்சனா இந்த முறை அருண் பிரசாத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்.
பிக் பாஸ் வீட்டில் அருணுக்கு நடக்கும் பிரச்னைகளுக்கு எதிராக வீடியோ மூலம் குரல் கொடுத்து வருகிறார். ஏற்கெனவே அருணுக்கு விஜய் சேதுபதி பேசுவதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை என்று கூறி ஒரு வீடியோவைப் பதிவிட்டிருந்தார். கடந்த வாரம் லேபர், ஸ்கில் டாஸ்க் நடந்தது. அதில் தீபக்கிற்கும், அருணுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த வார எபிசோடில் அருண் நடந்துகொண்ட விதம் பற்றி விஜய் சேதுபதி கோபமாக பல கேள்விகள் எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் அருணுக்கு ஆதரவாகப் பேசி அர்ச்சனா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் பேசியிருந்த அர்ச்சனா, " ஒரு வீடு என்றால் எல்லோரும் சமம் தான். நாம் குடும்பத்தோடு இருக்கும் போது, நாம் யாரையும் லேபர் என பிரித்து பார்ப்பது இல்லை. இந்த கருத்தைதான் அருண் சொன்னார். பிக் பாஸ் பொறுத்தவரை கேம் விளையாடுவதுதான் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்.
வேலை செய்வது அல்ல. லேபர் வேலை செய்பவருக்கு இது போதும் என தீபக் மற்றவர்களை குறைத்து மதிப்பிட்டதை எல்லாம் விட்டுவிட்டார்கள். ஆனால் அருண் பேசியதை மட்டுமே பெரிய பிரச்னையாக பேசினார்கள். தொகுப்பாளர் முதற்கொண்டு அவரை கார்னர் செய்ததால் அருணுக்கு பயம் வந்துவிட்டது.
விஜய் சேதுபதி கேட்கும்போதுதான் சொல்ல வந்த கருத்தை அவரால் தெளிவாக கூறமுடியவில்லை. இந்த விஷயத்தை ஏன் இவ்வளவு பெரிது பண்ணினார்கள் என்று தெரியவில்லை. இதை வைத்தே 40 நிமிடம் விஜய் சேதுபதி பேசினார்" என அர்ச்சனா குற்றம்சாட்டி இருக்கிறார்.