25 நாள்களாகியும் நெல் வயல்களில் வடியாத வெள்ளம்: அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள...
BB Tamil 8 Day 78: அழுகை, அரவணைப்பு, அம்மா... நெகிழ்ந்த பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
இந்த எபிசோடில் பெரிதாக எந்தவொரு நெகட்டிவிட்டியும் இல்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஃபீல் குட் எபிசோட். போட்டியாளர்களின் நகைச்சுவையுணர்வுகள் ரகளையாக வெளிப்பட்டன.
சவுந்தர்யாவின் கிச்சன் டிராமா, காமெடி சானலைப் பார்க்கும் எஃபெக்டைத் தந்தது. புளியை அவர் கரைத்தாரோ, இல்லையோ, பார்ப்பவர்களின் வயிற்றில் கரைத்து விட்டார்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 78
மார்னிங் ஆக்ட்டிவிட்டி. ‘யாரை ரொம்ப மிஸ் பண்றீங்க?’ என்று கேட்டு கண்ணீரைப் பிழிந்தெடுக்கும் டாஸ்க். ஆனால் அதிகமான சென்டிமென்ட் இல்லாமல் இயல்பாக கடந்தது. ‘பிக் பாஸின் வெறி கொண்ட ரசிகனாக இருக்கும் தனது மகனுக்காகவே இந்த ஷோவில் வந்திருப்பதாகச் சொன்ன தீபக், அவன் வரும் நாளை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். “எங்க அம்மாவை நான் ரொம்ப திட்டியிருக்கேன். மதிச்சதே இல்லை. ஆனா இப்பத்தான் புரியுது. அவங்க என் நல்லதுக்குத்தான் சொல்லியிருக்காங்க” என்று தொடர முடியாமல் கலங்கிய ஜெப்ரியைப் பார்த்து அன்ஷிதாவும் சவுந்தர்யாவும் கண்கலங்கினார்கள். தாயின் நிபந்தனையில்லாத அன்பை தாமதமாகப் புரிந்து கொள்ளும் ஒரு அராத்து பிள்ளையின் பிம்பத்தை சரியாக வெளிப்படுத்தினார் ஜெப்ரி.
“தினமும் அம்மா கிட்ட ரிப்போர்ட்டிங் பண்ணாம தூக்கமே வராது. ‘எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கறேன்’ ன்னு அவங்க சொன்னதே எனக்கு பெரிய பலம்” என்று கலங்கினார் ஜாக்குலின். “நாங்க குடும்பமா வாழ்ந்ததா ஃபீலே இல்லை. ஆளுக்கொரு மூலைல இருந்தோம். உங்களையெல்லாம் பார்க்கறப்ப அப்படி வாழணும்ன்னு ஆசை எனக்கும் வந்திருக்கு” என்றார் முத்து. “என்னை யாராவது செல்லம் கொஞ்சிட்டே இருந்தா பிடிக்கும். அம்மாவைத் தாண்டி அப்படி பண்றது என் பையனும் பார்ட்னரும். என் பையனைத்தான் ரொம்ப மிஸ் பண்றேன்” என்று ஒரு தாயின் பிரிவுத் துயரத்தை அடக்கமாக வெளிப்படுத்தினார் மஞ்சரி.
“இந்த ஷோல செலக்ட் ஆகலைன்னு சொல்லி அப்பா கிட்டயே prank பண்ணியிருக்கேன்” என்று சொல்லி சபையை சிரிக்க வைத்தார் ராணவ். (‘அப்ப உன்னை சந்தேகப்பட்டதுல தப்பேயில்லடா’ - சவுண்டு மைண்டு வாய்ஸ்) “அம்மா, அண்ணா கிட்ட நான் அன்பையே காமிச்சதில்லை. இனியாவது செய்யணும்” என்று கலங்கினார் அன்ஷிதா. இப்படி பாசத்தால் உருகும் பிம்பத்திடமிருந்துதான் சந்திரமுகி வெளிப்படுகிறார் என்பது ஒரு விசித்திரமான முரண்.
குடும்பத்தைத் தாண்டி சீரியல் இயக்குநரையும் ஹார்லி க்வீனையும் குறிப்பிட்டார் அருண். சீரியல் படப்பிடிப்பில் தனது உதவியாளனாக இருந்த பையனை விஷால் குறிப்பிட்டது சிறப்பு. “ஃபேமிலி கூட நான் நேரம் செலவழிச்சதே இல்லை. டபாய்ச்சுட்டு ஓடிடுவேன். இப்பத்தான் அப்படி பண்ண தோணியிருக்கு. நான் நடிச்ச சினிமா வந்தபிறகுதான் தியேட்டருக்கு வருவேன்னு எங்க அம்மா கடந்த அஞ்சு வருஷமா எந்தவொரு படத்தையும் பார்த்ததில்லை” என்று ஒரு சிறுகதைக்கான தீமை சொன்னார் ரயான். (விரைவில் வெள்ளித்திரையில் வருவதற்கு வாழ்த்துகள்!)
“என் ஃபேமிலி என் பிரெண்டையும் வரச் சொல்லுங்க. இன்னொரு பிரெண்டு கிட்ட சொன்னா இவருக்குச் செய்தி போகும்” என்று காமிரா முன்னால் வெட்கத்துடன் சொன்னார் ஜாக்குலின். (ஜாக்.. யார் அந்த ரோஸ்?!) பவித்ரா ஏதாவது ‘Laughing gas’-ஐ சுவாசித்து விட்டாரா என்று தெரியவில்லை. ‘பைரவா’ திரைப்படத்தில் வரும் ஜெகபதி பாபு காரெக்டர் போல அசந்தர்ப்பமான நேரங்களில் கூட பொங்கி பொங்கி சிரித்துக் கொண்டிருந்தார்.
சவுந்தர்யாவின் ‘காமெடி’ சமையல்
மக்களின் கருத்துக் கணிப்பு வந்த நேரம் கொழுத்த ராகுகாலமாக இருக்க வேண்டும். ஒருவேளை உணவை சவுந்தர்யா எல்லோருக்கும் சமைத்துக் கொடுக்க வேண்டும். எவருடைய உதவியும் இல்லாமல். அப்போதே மக்கள் உஷாராகி “காலைல நிறைய சாப்பிட்டுடலாம். அப்பத்தான் மதியம் பசிக்காது” என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.
“கிச்சன் ஏரியா - குற்றம் நடந்தது என்ன?” என்கிற தனி நிகழ்ச்சி மாதிரி சமையலில் சவுந்தர்யா தடுமாறிக் கொண்டிருந்ததை காமிரா ரசித்து ரசித்து பதிவு செய்து கொண்டிருந்தது. தனது டிசைன் டிசைனான முழிகளால் ‘புளியை அப்படியே போடணுமா.. லிக்விட் மாதிரி போடணுமா.. 12 பேருக்குன்னு 12 தக்காளி போடணுமா?” என்றெல்லாம் கேள்விகள் கேட்டு வீட்டை அதிரடித்தார் சவுண்டு. ‘கடவுளே.. இன்னமும் என்னென்னென்ன கொடுமைகளையெல்லாம் பார்க்கணுமோ?” என்கிற மாதிரி பலரும் அலறியடித்துக் கொண்டு கார்டன் ஏரியாவில் செட்டில் ஆனார்கள்.
ஜாக், ரயான், மஞ்சரி மட்டும் கிச்சன் ஏரியாவின் பக்கத்தில் அமர்ந்து சவுண்டை கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். “என்னதிது.. மூக்கு சிந்திப் போடறே .. கருமம்.. கருமம்.. நான் சாப்பிட மாட்டேன்’ என்று கலாட்டா செய்தார் ரயான். ‘இதுக்குப் பேரு மூக்குசளி குழம்பு’ என்று புது டிஷ்ஷைக் கண்டுபிடித்து குமட்ட வைத்தார் ஜாக்குலின். புளியைக் கரைத்து ஊற்ற வேண்டும் என்பதற்கு ‘ஐஸ் கிரீம் என்னவாகும்?’ என்று ஜாடையாக சொல்லி டிப்ஸ் கொடுத்தார் ரயான்.
பெண்கள் பணிக்குச் சென்று பொருளாதார தன்னிறைவு அடைந்து வருவது சமூகத்தில் நிகழும் ஒரு முக்கியமான ஆரோக்கியமான மாற்றம். ஆனால் அதே சமயத்தில் வீட்டில் சமைக்கும் பழக்கம் என்பது குறைந்து ‘ஆன்லைன் ஆர்டர்கள்’ பெருகி வருகின்றன. கிச்சன் ஏரியா பக்கமே பெண்ணை வரவழைக்காமல் செல்லம் கிடைக்கும் ‘dad’s little princess’கள் அதிகமாகி விட்டார்கள். இன்றைய தேதியில் திருமணமாகும் இளைஞர்களுக்கு சமையல் தெரிந்தால்தான் பிழைத்தார்கள். பாலின பேதம் இல்லாமல் சமையல் பணியை இருவரும் பகிர்ந்து கொள்வது ஆரோக்கியமான அம்சம் என்பது மறைந்து இருவருமே கிச்சன் ஏரியாவை வேண்டாவெறுப்பாக புறக்கணிப்பது என்றாகி விட்டது. இத்தகைய தலைமுறையின் ஒரு பிரதிநிதியாக சவுந்தர்யாவைப் பார்க்க முடிகிறது.
சவுந்தர்யா குழம்பை ரகளையாக கிண்டலடித்த முத்து
‘அடடே.. மீன் குழம்பு வாசம் வருதே” என்று பரவசப்பட்டார் முத்து. வெஜ் மீன் வறுவல் என்கிற மாதிரி இது புது அயிட்டம் போலிருக்கிறது. குழம்பை ருசி பார்த்து முகத்தைச் சுளித்த ரயான் “உங்க அப்பா வருவாரு. அவருக்காக கொஞ்சம் எடுத்து வை” என்று பங்கம் செய்தார். “ஹா. ஹா.. செம.. செம’ என்று போலியான பாவனையுடன் குழம்பு சாதத்தை சாப்பிட்ட முத்து “மக்களுக்கு எங்க மேல என்ன கோவமோன்னு தெரியல. வெச்சு செஞ்சிட்டாங்க. புளி மிச்சமிருக்கா.. இல்லையாம்மா.. இந்தக் குழம்பு. படு கேவலமா இருக்குன்னு எவனாவது சொல்லுவான். நம்பாத.. அவன என் கிட்ட கூட்டிட்டு வா” என்று சர்காஸத்தைப் போட்டு காய்ச்சினார்.
“50 மார்க் கொடுக்கலாம்” என்று ரயான் சொல்ல, “99.99 சுத்தமான அக்மார்க் குழம்பு” என்று கிண்டலடித்த முத்துவிடம் “அப்படியா.. அப்ப ஊத்திக் குடி” என்று வாயில் ஊற்றினார் ஜாக்குலின். “அவ்ளோ மோசம்லாம் இல்ல. சாப்பிடற மாதிரிதான் இருக்கு” என்று மஞ்சரி சொல்ல பார்டரில் பாஸ் செய்த சவுந்தர்யாவை அனைவரும் வாழ்த்தினார்கள்.
நாமினேஷில் வேறு விதமான குழம்பு கொதித்தது. அதிக வாக்குகளைப் பெற்று எவிக்ஷன் லிஸ்டின் முதலில் இருந்தார் அன்ஷிதா. ஐந்து வாக்குகள். அடுத்தபடியாக நான்கு வாக்குகளைப் பெற்றிருந்தார் மஞ்சரி. ஜெப்ரி, ஜாக், ராணவ், பவித்ரா ஆகிய நால்வரும் 3 வாக்குகளைப் பெற்றிருந்தார். முத்து, அருண், தீபக் போன்ற புள்ளிகள் எஸ்கேப். தான் தப்பித்த சந்தோஷத்தை நடனமாடிக் கொண்டாடினார் சவுந்தர்யா.
கேப்டன் இல்லாத வீடு - என்னவாகும்?
ஷாப்பிங் டாஸ்க். பிக் பாஸ் ஒரு திரையிசைப் பாடலை, மனப்பாடப் பகுதி போல் வாசிப்பார். அதை வைத்து பாடலின் ஆரம்பத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். சரியான விடைக்கு ஆயிரம் மதிப்பெண்களை அள்ளித் தந்து அசத்தினார் பிக் பாஸ். (டாஸ்க் செய்ய சக்தி வேணுமில்லையா?!) இதில் 7000 மதிப்பெண்களை அள்ளினார்கள்.
முத்துவின் சொதப்பல் காரணமாக இந்த வாரம் வீடு கேப்டன் இல்லாத அநாதையாகி விட்டது. எனவே ‘என்ன செய்யலாம்?’ என்று சபையைக் கூட்டினார் நடப்பு கேப்டனான விஷால். “கேப்டன் இல்லைன்னாலும் வேலை நடந்தாகணும்” என்று அணியைப் பிரித்தார்கள். ஸ்டோர் ரூம் இன்சார்ஜ் என்று தனியாக ஆள் போடுவதற்குப் பதிலாக, மணியடித்ததும் யார் முதலில் ஓடிச் செல்கிறார்களோ, அந்த நேரத்தில் அவர்தான் இன்சார்ஜ் என்று ஆட்டத்தில் சிறிய சுவையைக் கூட்ட முயன்ற முத்துவின் ஐடியா ஏற்றுக் கொள்ளப்பட்டது.
‘ஒரு நாள் முதல்வர்’ மாதிரி தினம் தினம் ஒரு கேப்டன் இருந்தால் வித்தியாசமா இருக்கும்’ என்று முத்துவின் ஐடியாவை டெவலப் செய்து சொன்னார் ஜாக்குலின். “டாஸ்க் சமயங்களில் கேப்டனுக்கான முக்கியத்துவம் இருக்கிறது. இதை ஏனோதானோவென்று கையாள முடியாது” என்றார் மஞ்சரி. “கேப்டனுக்கு பொறுப்புகள்தான் இருக்கிறதே ஒழிய, அதிகாரம் கிடையாது. அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்றார் முத்து.
முதல் நாள் முதல்வர் சவுந்தர்யா
“யார் யாருக்கெல்லாம் கேப்டன் ஆக விருப்பம்?” என்று கேட்கப்பட்ட போது ரயான், ராணவ், ஜாக்குலின் ஆகிய மூவரும் கை தூக்கினார்கள். வகுப்பில் தூங்கும் மாணவன், சத்தம் கேட்டதும் ‘யெஸ் ஸார்’ என்று தன்னாலேயே கையைத் தூக்குவதைப் போல், குழம்பு சமைத்த களைப்பில் சோபாவில் சாய்ந்திருந்த சவுந்தர்யா, உசுப்பப்பட்டதும் தன்னாலேயே கையைத் தூக்கி விட்டார். எனவே அவர்தான் முதல் நாளின் கேப்டன். ‘அய்யோ.. நானா..’ என்றவர் ‘விடு பார்த்துக்கலாம்’ என்கிற மோடிற்கு மாறினார். அப்ப காமெடி காட்சிகள் கியாரண்டி.
இப்போது குறுக்கிட்ட பிக் பாஸ் “சவுந்தர்யா சமையல் பகுதி இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்தது. இதுவரை இந்த வீட்டில் இன்னமும் சமைக்காதவர்கள், சமைக்கட்டும். ராணவ் மட்டும் உதவியாளர் வெச்சுக்கலாம்” என்றார். கிறிஸ்துமஸ் வருவதையொட்டி, பொழுது போகாத சமயத்தில் ‘கிறிஸ் மாம்’ என்றொரு விளையாட்டை ஜாக்குலின் சொல்ல, அதன்படி ஆளாளுக்கு பரிசு கொடுத்து கலாட்டா செய்தார். ராணவ்வை நகர்த்திக் கொண்டு போய் பவித்ராவிடம் ஒப்படைத்து ‘இந்தாம்மா உனக்கான பெரிய பரிசு’ என்று நக்கலடித்தார் அருண். தீயணைப்புக் கருவியை தூக்கி வைத்துக் கொண்டு யாருக்குத் தரலாம் என்று அருண் யோசிக்க “பவித்ராதான் ஃபயர் மோட்ல இருக்கா” என்று எடுத்துக் கொடுத்தார் ரயான்.
நண்பர்கள் கூட்டத்தில் திடீரென்று நமக்கு ஒரு ஜோக் செய்ய ஆசை வந்து விடும். ஆனால் கூச்சல் குழப்பத்தில் அது கவனிக்கப்படாமல் போய் விடுமோ என்பதால், ‘டேய்.. இங்க பாரேன்.. நான் சொல்றதைக் கேளேன்..’ என்று எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து விட்டு பிறகு சொல்லுவோம் அல்லவா, அப்படியாக அருண் இந்த ஜோக்கை சொல்ல அனைவரும் சிரித்தார்கள்.
“நாளைக்கு டாஸ்க் ஹெவியா இருக்கும். சீக்கிரம் தூங்கப் போகலாம். அப்பத்தான் காலைல எழுந்திருக்க சரியா இருக்கும்” என்று பேசிக் கொண்டார்கள். அப்படியெல்லாம் அவர்கள் அலாரம் வைத்துக் கொண்டு காலையில் சீக்கிரமாக எழுவதற்கு சிரமப்படத் தேவையில்லை. எழுப்பி விடும் வேலையை ‘சவுந்தர்யா குழம்பு’ கச்சிதமாக செய்து விடும்.