டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
BB TAMIL 9: DAY 23: `நெகட்டிவ் எனர்ஜியை கொண்டாடிய பிக் பாஸ் வீடு' - பாரு, திவாகரால் ரணகளம்!
வெட்டி வைத்த வெங்காயம் முதற்கொண்டு அனைத்து உணவுப் பொருட்களையும் பிக் பாஸ் பிடுங்கிக் கொண்டு விட்டார். கஞ்சி காய்ச்சி குடிக்க வேண்டிய நிலைமை.
நாமாக இருந்தால் சோர்வில் அப்படியே சாய்ந்து விடுவோம். ஆனால் இந்த வீட்டில் ஹை - எனர்ஜியுடன் சண்டை போடுகிறார்கள். அதிலும் காமிராக்களுக்கு ஓவர் டைம் கொடுப்பது போல நாள் பூராவும் மூச்சு விடாமல் கத்திக் கொண்டிருக்கும் பாருவின் எனர்ஜி இருக்கிறதே?! கஞ்சி is the secret of her energy?!

‘ஓயாதே.. போராடு’ என்கிற மோட்டிவேஷன் பாடல் காலையில் ஒலித்தது. சோறு இல்லையென்றாலும் ரீல்ஸ் மோகம் திவாகருக்கு குறையவில்லை. “பாருங்க.. சார். சோப்பு சீப்பு இல்லைன்னா கூட உற்சாகமாக இருக்கோம்” என்று கையால் காற்றை வெட்டி வெட்டி காமிரா முன்பு பேசிக் கொண்டிருந்தார்.
மார்னிங் ஆக்டிவிட்டி. ஒவ்வொருவரும், பாசிட்டிவ் மெசேஜ் சொல்ல வேண்டுமாம். இது வீட்டு தலயின் ஆர்டர். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே ஒட்டு மொத்த வீடும் நெகட்டிவிட்டியாக மாறப் போகிறது என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார்.
“நல்லதே நடக்கும். ஏன்னா நான் நல்லவன்” என்கிற மெசேஜ் சொல்லி ஆரம்பத்திலேயே காமெடி செய்தார் கம்ருதீன். அடுத்ததாக ஆரம்பித்தார் திவாகர். ‘தர்மமே வெல்லும்’ என்றார். அத்தோடு முடித்திருந்தால் கூட ஓகே. ஆனால் ஸ்கிரீன் டைமை எடுத்துக் கொள்வதில் பாருவிற்கு சீனியர் ஆயிற்றே திவாகர்?! எனவே “சத்தியம் நெருப்பு மாதிரி. அதுதான் கடைசியில் ஜெயிக்கும. உண்மைதான் லட்சியம். வெல்லுவது நிச்சயம்” என்று ரைமிங்கில் அடுக்கிக் கொண்டே போக, கேட்கும் நமக்கே வெறுப்பாகும் போது வீட்டில் உள்ளவர்களுக்கு ஆகாதா என்ன?
“போதும்.. நிறுத்துங்க” என்று தல சொல்ல, கூட மற்றவர்களும் இணைந்து கொள்ள, அனைவரையும் விட்டு விட்டு வழக்கம் போல் வினோத்தை குறிவைத்து “என்னை நிறுத்தச் சொல்ல நீ யாரு?” என்று திவாகர் பாய, ஆரம்பித்தது ரணகளம். “டேய் பைத்தியக்காரா.. நானா நிறுத்தச் சொன்னேன்.. தல சொன்னாரு” என்று வினோத் கத்த, பதிலுக்கு திவாகர் கத்த வீடு முழுவதும் நெகட்டிவ் எனர்ஜி ஜகஜ்ஜோதியாக பரவியது.

“இந்தாளு காரியக் கிறுக்கன். என்னைத்தான் டார்கெட் பண்றாரு.. பண்றதையெல்லாம் பண்ணிட்டு பரிதாபமா மூஞ்சை வெச்சுக்கறாரு” என்று வினோத் அனத்தியதில் உண்மை இருப்பது போல்தான் தெரிகிறது.
ஆர்மி கேம்ப் மாதிரி வீட்டை நடத்துவேன் என்று கம்பீரமாக ஆரம்பித்த பிரவீன்ராஜ், இரண்டாவது நாளிலேயே டயர்ட் ஆகி “யப்பா.. நிறுத்துங்க. போதும். புள்ளகுட்டிங்களை படிக்க வைங்க” என்று உபதேசம் செய்து நொந்து போனார். திவாகருக்கும் வினோத்திற்குமான சண்டை அப்படியே பரவியது. கஞ்சி சாப்பிடும் போதே இத்தனை பகுமானம்.
அனைவரையும் கெஞ்சி ஒருவழியாக சத்தத்தைக் குறைத்த பிரவீன், “ரெண்டு பேரும் கை கொடுத்துக்குங்க” என்று சொல்ல இருவரும் சம்மதிக்கவில்லை. “சரி. கிளாப் பண்ணுங்க” என்று ‘கட்டிப்பிடி வைத்தியம்’ மாதிரி ‘கைத்தட்டல் வைத்தியம்’ செய்து சமாதானத்தின் அடையாளமான வெள்ளைக் கொடியை அரை கம்பத்தில் பறக்க விட்டார் பிரவீன்.
சோர்வாகி ஜென் நிலையில் உட்கார்ந்திருந்த பிரவீனிடம் “என்ன தல.. ஆர்மி கேம்ப் மாதிரி வீட்டை வெச்சுப்பேன்னு சொன்னீங்க.. சந்தைக்கடை மாதிரி இருக்கு?” என்று கேட்டு வெறுப்பேற்றினார் பிக் பாஸ். வீட்டில் உள்ளவர்கள் மேக்கப் சாதனங்கள் ஏதாவது ஒளித்து வைத்திருக்கிறார்களா, பயன்படுத்துகிறார்களா என்று சோதனை செய்ய வேண்டும். கடைசியில் பார்த்தால் தலயே பர்ப்யூம் பாட்டிலை வைத்திருந்தது தெரிய வந்தது.

மார்னிங் ஆக்டிவிட்டியில் திவாகர் செய்த அலப்பறை, பார்வதியை காண்டாகியிருக்க வேண்டும். நான் ஒருத்தி இங்க இருக்கும் போது இன்னொருத்தன் பக்கம் கவனம் போவதா? என்று உள்ளுக்குள் சபதம் போட்டுக் கொண்டார் போல. சபையைக் கூட்டி பிரவீன் பேசும் போது “எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். இந்த வீட்டை ஆர்மி கேம்ப் மாதிரிதான் நடத்தப் போறீங்களா.. என்னால உடற்பயிற்சியெல்லாம் செய்ய முடியாது. என்ன பண்ணணுமோ பண்ணிக்குங்க” என்று வழக்கம் போல் பாரு ஏழரையைக் கூட்ட, அதுவரை காத்து வைத்திருந்த பொறுமை பிரவீனுக்கு போய் விட்டது.
‘தலவலியா.. சுரமா.. மூக்கடைப்பா.. ஆமாம்ப்பா.. ஆமாம்” என்கிற விளம்பரம் மாதிரி “ஆமாம்.. இந்த வீட்டை ஆர்மி கேம்ப் மாதிரிதான் நடத்தப் போறேன்” என்று டென்ஷன் ஆகி கத்தினார் பிரவீன். “கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?” என்று பிரவீன் கேட்க “உங்களுக்கு அமைதி வேணுமின்னா ஊட்டி கொடைக்கானல் போங்க” என்று நக்கலடித்த பாரு “நீ தலன்னா.. நான் பத்து தல” என்று கெத்து காட்டினார். (அது சரி, ஊட்டி கொடைக்கானல் போனா அமைதியா இருக்கும்ன்னு யாரு சொன்னது?!)
பாருவிற்கு ஆதரவாக திவாகரும் களம் இறங்கி “தல.. நீங்க ஒருதலைப்பட்சமா இருக்கீங்க?” என்று கத்த “அதானே. நேத்து மட்டும் என்னை கனி கிட்ட மன்னிப்பு கேட்க வெச்சீங்கள்ல.. இன்னிக்கு வினோத்தை மன்னிப்பு கேட்கச் சொன்னீங்களா?” என்று பின்பாட்டு பாடினார் பாரு. இவர்களின் சண்டை ஓயாததால் மற்றவர்கள் காதைப் பொத்திக் கொண்டார்கள்.

“சைலன்ஸ்.. இதை சத்தமாத்தான் சொல்ல வேண்டியிருக்கு” என்று ‘தம்பி’ மாதவன் மாதிரி பொங்கியெழுந்தார் எஃப்ஜே. “பர்சனல் பிராப்ளத்தையெல்லாம் தனியா போய் பேசுங்க. மத்தவங்க நிம்மதியைக் கெடுக்காதீங்க” என்பது அவரது கோபம். “இனிமே ஸாரி கேட்கற கேம் கிடையாது. நேத்தே முடிவு பண்ணிட்டோம்” என்றார் பிரவீன்.
“போடா முடியாது” என்று பாரு கத்த பிரவீன் அதை ஆட்சேபித்து மன்னிப்பு கேட்கச் சொல்ல “மத்த நேரத்துல போடான்னு சொல்ற வழக்கம்தானே.. இப்ப என்ன திடீர் மரியாத கேக்கற?” என்று பாரு பிடிவாதம் பிடித்தார். என்னதான் நெருங்கிய நண்பராக இருந்தாலும் ஒரு சபை நடுவே பேசும் போது அடிப்படை நாகரிகத்தை கடைப்பிடிப்பது பண்பான விஷயம். பாருவிடம் அதையெல்லாம் எதிர்பார்ப்பது வீண்.
இவர்களின் சண்டையை நீண்ட நேரம் வேடிக்கை பார்த்த பிக் பாஸ் “கன்டென்ட்ன்ற வார்த்தையை நீங்க பயன்படுத்தாதீங்க. மக்களுக்கு வேணுமின்னா அது கன்டென்ட்டா இருக்கலாம். ஆனா உங்களுக்கு இது வாழ்க்கை” என்று அவர் சொன்னது எடுபடவா போகிறது?! (அது சரி பிக் பாஸ் இந்த சதி வேலைகளையெல்லாம் கன்டென்ட்டுக்காக அல்லாமல் எதற்காக செய்கிறார்?!)

சற்று ஓய்வெடுத்த பார்வதி, பழைய சண்டையின் சூடு ஆறுவதற்குள் அடுத்ததை ஆரம்பித்து விட்டார். “உங்க கூட சோ்ந்ததாலதான் எனக்கு நாமினேஷன் ஓட்டு விழுந்தது” என்று வினோத் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. அதை வைத்து ஹைடெசிபலில் இன்னொரு சண்டையை உக்கிரமாக ஆரம்பித்தார் பாரு. இன்னொரு பக்கம் சிலர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க, பாரு அண்ட் கம்பெனிக்கு வாயால் மட்டுமே எக்சர்சைஸ் செய்தால் போதும் போலிருக்கிறது.
சந்தடி ஓய்ந்தவுடன் பாருவிடம் சமாதானம் பேச உட்கார்ந்தார் பிரவீன். ஆனால் அது நடக்கிற காரியமா? “மூடிட்டு உக்காருங்கன்னு எதுக்கு சொன்னீங்க.. நீங்க கனிக்கு சப்போர்ட்டா.. பொண்ணுன்னா மிரட்டுவீங்களா?” என்று விக்டிம் கார்டை பாரு கையில் எடுக்க “யப்பா.. ஒண்ணாம் நம்பர் பிளாப்பு நீங்க” என்று தெறித்து ஓடினார் பிரவீன்.
பிக் பாஸ் வீட்டிற்கும் சூப்பர் வீட்டிற்கும் இடையில் நடக்கும் போட்டியில் வெல்லும் அணிக்கு ஆயிரம் பாயிண்ட்ஸ் கிடைக்கும். பொருட்காட்சி, திருவிழாக்களில் ஆடும் ஆட்டம் போல கச்சா முச்சாவென்று சில டாஸ்க்குகள். மற்றவர்கள் கடகடவென்று செய்து முடிக்க, வாய் கிழிய பேசும் பார்வதியால் இந்த ஆட்டத்தை ஒழுங்காக ஆட முடியவில்லை. “இவ்ளோ ஆடுவேன்னு நானே எதிர்பார்க்கலை” என்று இதையும் பிறகு பெருமையடித்துக் கொண்டார் பாரு. இறுதியில் சூப்பர் டீலக்ஸ் வீடு போட்டியில் வென்று லாக்கர் அறைக்குள் செல்ல தகுதி பெற்றது.
திவாகர் மற்றும் கலையைப் பற்றி கம்ருதீனிடம் புறணி பேசிக் கொண்டிருந்த பாரு, இப்போது பிளேட்டை மாற்றி கம்ருதீன் பற்றி திவாகரிடம் புறணி பேசிக் கொண்டிருந்தார். “கம்மு என்னை யூஸ் பண்ண டிரை பண்றான். ஒரு மாதிரியா டச் பண்றான். நான் சொல்லிட்டேன் தோழர் கம்ருதீன்.. ஹெல்தியான பவுண்டரி மெயின்டெயின் பண்ணுன்னு.. அவனுக்கு சுயமா சிந்திக்கத் தெரியலை” என்றெல்லாம் பாரு புகார்களை அடுக்க “அவன் அப்படித்தான் பாரு. வினோத் பயலும் அப்படித்தான். நீ தனியா ஆடு. யார் கூடயும் சேராத” என்று புத்திமதி சொல்லிக் கொண்டிருந்தார் திவாகர். (யப்பா.. சாமி.. அந்த அட்வைஸை கண்ணாடி பார்த்து உங்களுக்கு நீங்களேதான் சொல்லிக்கணும்!).
லாக்கர் அறை திறக்கப்படும் நேரம். ஆயிரம் பாயிண்ட்டிற்கு உண்டான பொருட்களை வெளியே கொண்டு வரலாம். ஒருவேளை அதற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை கொண்டு வந்து விட்டால், அதில் எதை வைத்துக் கொள்ளலாம் என்பதை பி்க் பாஸ் வீடுதான் முடிவு செய்யும்.

லாக்கர் அறைக்குள் சென்று பொருட்களை எடுத்து வருவதற்கான நேரம் 9 செகண்டுகளாம். இதெல்லாம் ரொம்ப அநியாயம். ஒலிம்பிக் கேமில் கூட இத்தனை குறுகிய நேரம் இருக்காது. சபரி, கலை, பிரவீன் ஆகிய மூவரும் உள்ளே பாய்ந்து பொருட்களை அள்ளினார்கள். இப்போதைய பிரதான தேவை சோறு என்பதால் உணவுப் பொருட்கள்தான் இவர்களது டார்கெட்டாக இருந்தன.
அவசரத்தில் அள்ளியதால் ஆயிரம் மதிப்பெண்களுக்கும் அதிகமாக கொண்டு வந்து விட்டார்கள். கணக்கு பார்த்ததில் 4600 மதிப்பெண்களுக்கான பொருட்கள். சூப்பர் வீடு தோற்றதால் உற்சாகத்தில் பார்வதி கத்தினார். “சனியனே.. சாப்பாடுன்றது எல்லோர் சம்பந்தப்பட்ட விஷயம்” என்கிற மாதிரி தலையில் அடித்துக் கொண்டார் கனி.
எந்தப் பொருட்களை வைத்துக் கொள்ளலாம் என்பதை பிக் பாஸ் வீடு முடிவு செய்யும். “ஹய்யா.. எல்லாமே நம்மளுக்கா?” என்று பேராசையில் கூவிய பாரு பிறகு வழக்கம் போல் மன்னிப்பு கேட்டார். பொருட்களை முடிவு செய்வது பிக் பாஸ் வீடாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் ‘கைக்கு கிடைத்தது, வாய்க்கு கிடைக்கவில்லை’ என்கிற கதையாக, போட்டியில் ஜெயித்திருந்தாலும் பொருட்களை இழந்த சூப்பர் வீடும் இந்தத் தோ்வில் கலந்து கொள்ள “ஏம்ப்பா.
இந்த க்ரூப் மென்ட்டாலிட்டி இருக்கக்கூடாதுன்னுதானே.. தனித் தனி அணியா ஆடச் சொன்னோம்.. அப்பவும் இதே மாதிரி இருந்தா எப்படி.. எப்படியாவது ஒழிஞ்சு போங்க. நான் தூங்கப் போறேன்” என்று கிளம்பி விட்டார் பிக் பாஸ்.

ஒருவழியாக இந்தப் பஞ்சாயத்து முடிந்ததும், அடுத்தது ஆரம்பித்தது. இது வியன்னாவின் நேரம். “பிரவீன் என்னை முறைச்சுப் பார்த்தது எனக்கு பயமா இருந்தது. என் வாழ்க்கைலயே அப்படியொரு முறைப்பை பார்த்ததில்லை. Insecured-ஆ இருந்தது” என்று வியன்னா கத்தி கூப்பாடு போட “ஒரு பக்கம் இவங்க அடிச்சுக்கறாங்க. இன்னொரு பிக் பாஸ் டைம் முடியப் போகுதுன்னு சொல்றாரு. கரெக்ட்டா அந்த டைம்ல நீங்களும் வந்து எதையோ பேசறீங்க. நான் என்னதான் செய்யறது?” என்று பிரவீன் கதற “எப்படியோ தொலைஞ்சு போங்க. நான் போறேன்” என்று படுக்கையில் போய் விழுந்தார் வியன்னா.
இருக்கிற போட்டியாளர்களின் ஏழரை போதாது என்று புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரிகளும் உள்ளே வரப் போகிறார்களாம்! என்ன நடக்குமோ?!


















