இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி
Big Boss 8: DAY 99; மோதிரத்தை திருப்பித் தந்த விஷால்... முட்டிக்கொண்ட ரவி - தர்ஷிகா!
விருந்தினர்களின் வருகையால் வீடு புத்துயிர் பெற்றது. தர்ஷிகா எத்தனை மெச்சூர்டான பெண் என்பது இன்னமும் அழுத்தமாக நீருபணமானது. எல்லை மீறி பேசிய அர்னவ்வை, சத்யாவும் ஜெப்ரியும் மிதமாக காண்டாக்கியது சுவாரசியமான காட்சி. சவுந்தர்யாவிற்கும் சுனிதாவிற்குமான வாக்குவாதம் பயங்கர சூடு.
இந்த வம்புகளையெல்லாம் தாண்டி இறுதி எல்லையை வெற்றிகரமாக கடக்கப் போகிறவர் என்பதுதான் முக்கியம். எதிர்பார்த்திருந்த நபர்களுள் ஒருவரா அல்லது வேறு டிவிஸ்ட் இருக்குமா?
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 99
சவுந்தர்யாவின் PR டீம் சக போட்டியாளர்களை மலினப்படுத்தினார்கள் என்று சுனிதா வைத்த குற்றச்சாட்டு, சவுந்தர்யாவின் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்திருக்கலாம். இதை அவர் பொதுவில் கிளியர் செய்தாக வேண்டும். எனவே ரியாவை துணையாக வைத்துக் கொண்டு “எங்காளுங்க அப்படி பண்ணியிருக்க மாட்டாங்க” என்பது போல் விளக்கம் அளித்தார். இவர்களின் நடுவே கடந்து போன பவித்ரா, கீழே இருந்த சிறு குப்பையை குனிந்து எடுத்துக் கொண்டு போனது குறிப்பிடத்தகுந்தது. (சின்சியர்!)
காலை. விஷால் மன்னிப்பு கேட்டது தொடர்பாக சவுந்தர்யாவிற்கு இன்னமும் தெளிவு பெற வேண்டியிருந்தது. அதை எத்தனை நாசூக்காக சொல்ல முடியுமா, அத்தனை நாகரிகமாக விளக்கினார் விஷால். “ஆண்கள் ஒரு விஷயம் இயல்பாக செய்தால் வெளியே எளிதில் தவறாகத் தோன்றக்கூடிய வாய்ப்பிருக்கிறது. அதையே பெண்கள் செய்தால்?’ என்பதுதான் விஷாலின் கேள்வி.
‘இன்னமும் ஒரு வாரம்தான் இருக்கு. ஜாலியா இருங்க. அதுக்காக போட்டி இருக்காதுன்னு நெனச்சிடாதீங்க. அதுவும் இருக்கு’ என்று எச்சரித்தார் பிக் பாஸ். (இன்னுமா இந்த உலகம் உங்களை நம்புது!). சேலன்ஜ் 8 அணிக்காரர்கள் என்னதான் செய்து கிழித்தார்கள் என்பதை பொதுவில் சொல்ல வேண்டும். (சாப்பிட்ட பில்லுக்காவது ஏதாவது செஞ்சீங்களாப்பா?!)
‘மைண்ட் கேம் விளையாடினேன்’ என்றார் ரவி. ‘சிலரோட ஸ்ட்ராட்டஜியை எக்ஸ்போஸ் செய்தேன்’ என்றார் சாச்சனா. தர்ஷாவிற்கு அதேதான். ஆனால் இறங்கி அடித்தவர் சுனிதாதான். “உங்களை எக்ஸ்போஸ் பண்றதுதான் எங்க விளையாட்டு. சவுந்தர்யாவிற்கு வெளில இருந்து விளையாடறாங்க. ஜாக் எமோஷன்ஸை வெச்சு விளையாடறாங்க” என்று சுனிதா காட்டமாக புகார் வைக்க “மூளையில்லாம பேசலாமா?” என்று முணுமுணுத்தார் சவுந்தர்யா.
சுனிதாவும் சவுந்தர்யாவும் மோதல்
அடுத்து எழுந்த ரியா “இத்தனை நாள் உழைப்பு போட்டவங்களை டிஸ்டர்ப் பண்ணாம நியாயமா விளையாடினேன்” என்று சொல்ல, அநாவசியமாக சுனிதாவிற்கு கோபம் வந்து “அப்படின்னா நாங்க அநியாயமா விளையாடினோமோ?” என்று தேவையில்லாத கேள்வியைக் கேட்க, சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சவுந்தர்யாவிற்கு நல்ல சான்ஸ் கிடைத்தது. ‘அவங்க கருத்தை அவங்க சொல்றாங்க. நீங்க ஏன் தலையிடறீங்க?’ என்று சவுண்டு கேட்க சுனிதாவிற்கும் அடித்தது ஒரு சான்ஸ்.
‘என் கிட்ட வெச்சுக்காத’ என்று ஆரம்பித்து சுனிதா இறங்கி அடித்து ‘உன்னை மாதிரி எனக்கு இங்க ஃபேமிலி பேக்ரவுண்ட் கிடையாது. ஓட்டு போட ஆளுங்க கிடையாது. நான் தனியா வளர்ந்த காட்டு மரம்’ என்கிற மாதிரி சண்டை போட “உன்னை மாதிரி மத்தவங்களை கீழ இறக்க மாட்டோம். கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்துல வந்து உக்காந்திருக்கோம்” என்று சவுண்டு பதிலடி தர “ஹேஹே.. நீ கஷ்டப்பட்டு வந்தியா.. நல்ல ஜோக்’ என்கிற மாதிரி சுனிதா சர்காஸம் செய்ய அடுத்து பேச வந்த சிவா, மீண்டும் போய் பம்மி அமர்ந்து விட்டார்.
‘ஹவுஸ்மேட்ஸ்களுக்காக பேசினேன்’ என்று ஜென்டில்மேனாக சிவா பேச, “பெட்டிய எடுக்க வைக்கறதுக்காக சிலரிடம் பேசினேன்” என்றார் அர்னவ்.
“யப்பா டாப் எட்டு.. இப்ப நீங்க சொல்லுங்க.. அவங்க பேசினதுல நீங்க எங்கெல்லாம் தடம் புரண்டீங்க?” என்று பிக்பாஸ் கேட்க “ஆமாங்கய்யா.. நாங்க டிரையின் மாதிரி கவுந்துட்டோம்” என்று ஒப்புக் கொள்ள இவர்கள் என்ன முட்டாள்களா? ஆக அனைவருமே “அவிய்ங்க என்னென்னமோ பேசினாங்க. மண்டையைக் கழுவ டிரை பண்ணாங்க.நாங்க அசரலையே.. ஹேஹே…” என்று கெத்தாக பேசினார்கள்.
சுனிதாவை வலிக்காமல் அடித்த சவுண்டு
எல்லோரும் போன பாதையில் சென்றால் அது சவுந்தர்யா அல்லவா? எல்லோரும் பயத்தை மறைத்துக் கொண்டு வீரமாகவும் புத்திசாலித்தனமாகவும் பேச, பயத்தை நேருக்கு நேராக சந்தித்தார் சவுண்டு. “ஆமாய்யா.. நான் உடைஞ்சேன். சுனிதா பேசினது எனக்கு ஹர்ட் ஆச்சு. ‘கஷ்டப்படற பொண்ணு மாதிரி தெரியலைன்னு என்னைப் பத்தி சொன்னாங்க. ஆனா அவங்க கஷ்டப்படடுதான் வந்திருக்காங்க. அதை சொன்னா அழுவாங்கள்ல.. நான் பண்ணா மட்டும் டிராமாவா?” என்று சுனிதாவிற்கு வலிக்காமல் அடித்து சமாதானக் கொடி காட்டினார் சவுந்தர்யா.
“ஓகே.. அப்படின்னா உங்களை யாரும் தடம் புரள வைக்கலை.. இல்லையா?” என்று அவராக பஞ்சாயத்தை முடித்து விட்டார் பிக் பாஸ். ஆனால் போட்டி இருப்பதை மறக்கக்கூடாதாம். (க்க்கும்.. இந்த பில்டப்பிற்கு மட்டும் குறைச்சல் இல்லை!).
பாடல் ஒலிக்க தர்ஷிகா உற்சாகமான என்ட்ரி. பழைய நண்பரைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சி அனைவரிடமும் தெரிந்தது. பவித்ரா கூடுதல் ஹாப்பியாக இருந்தார். ஆனால் விஷால் மட்டும் உறைந்து அப்படியே நின்றார். ‘என்னத்த சொல்லப் போறாளோ..’ என்கிற மாதிரியான தயக்கம் அவருக்குள் இருந்ததைப் போல் இருந்தது. அனைவரையும் கட்டியணைத்த தர்ஷிகா, விஷாலுக்கு மட்டும் கை கொடுத்து விட்டு சென்றார். அப்செட்டாக கிச்சன் ஏரியாவில் வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்த விஷாலுக்கு சிவா ஆறுதல் சொன்னார்.
உற்சாகப் புயலாக வந்த தர்ஷிகா - உறைந்து நின்ற விஷால்
“எல்லோருமே சூப்பரா பிளே பண்றீங்க.. 99 நாள் வந்துட்டீங்க.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வாரம் முழுக்க செலிபிரேட் பண்ணுங்க. ஜாலியா இருங்க” என்று டாப் 8 அணியை உற்சாகப்படுத்தினார் தர்ஷிகா. “உங்க பிரெண்டு வந்துட்டாங்க போலயே” என்று டல்லாக இருக்கும் விஷாலை உற்சாகப்படுத்தும் விதமாக சவுந்தர்யா சொல்ல “நானும் அதுக்குத்தான் காத்திட்டு இருந்தேன்’ என்று மையமாக சொன்னார் விஷால் “இது ஒரு கேம் ஷோ. இங்க ஆயிரம் விஷயம் நிச்சயம் நடக்கும். எதையும் மைண்ட்ல ஏத்திக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிக்கிட்டேன்” என்று ஜாக்கிடம் தர்ஷிகா சொன்ன ஸ்டேட்மெண்டில் மெச்சூரிட்டி தெரிந்தது.
தனது நெருங்கிய தோழியான பவித்ராவுடன் பேச அமர்ந்தார் தர்ஷிகா. “உன்னை தனியா விட்டுட்டுப் போயிட்டேன்.. ஸாரி” என்று தர்ஷிகா மன்னிப்பு கேட்க “ஆமாண்டி.. கிச்சான்னாலே இளிச்சவாயன்ற மாதிரி என்னைத்தான் ஈஸியா தூக்கிப் போட்டு மிதிச்சாங்க. யாரு போவான்னு கேள்வி வந்தாலே காமிரா கூட என்னைத்தான் திரும்பிப் பார்க்குது” என்கிற மாதிரி கண்ணீர் விட்டார் பவித்ரா. (அவர் அழுகிறாரா என்பதைப் பார்க்க அத்தனை டைட் க்ளோசப் தேவையா டீம்?!).
“இங்க நடந்த விஷயங்களால அம்மா ரொம்ப டவுன் ஆயிட்டாங்க.. வெளிலலாம் ‘டாப் 5-ல வர வேண்டிய பொண்ணுன்னு பேசறாங்க. ஆனா அம்மாவை சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு. எனக்காக யாரையும் பிளேம் பண்ண தேவையே இல்லை. அதை நான் பார்த்துக்கறேன்’ என்றார் தர்ஷிகா.
‘நேத்திக்குத்தான் தேவாங்கைப் பார்த்தேன்’ என்கிற ஜோக் மாதிரி, தாமதமாக அர்னவ்விடம் விசாரணையை ஆரம்பித்தார் சவுந்தர்யா. ஜெப்ரி பற்றி தவறாக பேசியதற்கு கண்டனம் தெரிவிப்பதை பொதுவில் பதிவு செய்கிறாராம். “மக்கள் கேட்கச் சொன்னதைத்தான் கேட்டேன்” என்று அபத்தமாக விளக்கம் கொடுத்தார் அர்னவ். வெளியில் ஆயிரம் வன்மங்களைக் கொட்டுவார்கள். அதையெல்லாம் உள்ள கொண்டு வரும் தபால்காரரா அர்னவ்? அவருக்கென்று சுயபுத்தி இல்லையா?
அர்னவ்வை ஜாலியாக பழிவாங்கிய ஜெப்ரி - சத்யா
பாடல் ஒலிக்க சத்யாவும் ஜெப்ரியும் ரகளையாக என்ட்ரி கொடுத்தார்கள். ‘இருக்கு. நிச்சயம் என்னை வெச்சு செய்யப் போறாங்க’ என்கிற மாதிரி ஓரமாக நின்றார் அர்னவ். மக்கள் உற்சாக வெள்ளத்துடன் அவர்களை வரவேற்க “ஏன் அழுவுற.. என்ன ஆச்சு” என்று சவுந்தர்யாவிடம் விசாரித்தார் ஜெப்ரி. அர்னவ்வை விசாரிப்பதை மட்டும் கவனமாக தவிர்த்தார் ஜெப்ரி. “டேய் ரயானு.. தங்கக்குட்டி.. கலக்கறாடா” என்று ரயானை பாராட்டினார் சத்யா.
அதற்குள் விஷாலுக்கும் அர்னவ்விற்கும் முட்டிக் கொண்டு விட்டது. ‘அடுத்து அன்ஷிதா வருவா.. எல்லோரும் ஹாப்பி..’ என்று யாரோ சொல்ல ‘விஷாலுக்கும் ஹாப்பி’ என்று வில்லங்கமான கமெண்ட்டை அர்னவ் அடித்தார் போலிருக்கிறது. ‘என் பேரை ஏன் இழுக்கற?” என்று ஆத்திரப்பட்டார் விஷால். எனில் அன்ஷிதா உள்ளே வரும் போது தரமான சம்பவங்கள் காத்திருக்கிறது போல.
சபையின் நடுவே வந்து நின்ற சத்யாவும் ஜெப்ரியும் அர்னவ்வை ரிவேன்ஜ் எடுக்க ஆடிய டிராமா சுவாரசியமாக இருந்தது. “டேய் சட்டை பட்டனை ஒழுங்க போடு” என்று சத்யாவை ஜாலியாக ஆட்சேபித்தார் ஜெப்ரி. “நீ தள்ளி நில்லுப்பா.. என்னை தடவாத” என்று பதிலுக்கு கவுன்ட்டர் தந்தார் ஜெப்ரி. இந்த சர்காஸ டிராமாவிற்கு அர்னவ்வைத் தவிர மற்றவர்கள் வெடித்து சிரித்தார்கள். “சரி விடு.. ஜெப்ரி.. அவன் கிட்டலாம் டைம் வேஸ்ட் பண்ணக்கூடாது. நாம நண்பர்களை மகிழ்ச்சிப்படுத்துவோம்” என்றார் சத்யா.
“டாப் 8 போட்டியாளர்களை மட்டும்தானே பேசணும்.. ஏன் இல்லாதவங்களைப் பத்தி பேசினீங்க..?” என்று அர்னவ்வை நோக்கி ஜெப்ரி கேட்டது சரியான கேள்வி. “என்னைப் பேசினவங்களை பதிலுக்கு பேசினேன். மக்கள் கேக்கச் சொன்னாங்க” என்று அதே பாட்டைப் பாடினார் அர்னவ். “எனக்கு வீட்டாண்ட நாலு அக்கா இருக்காங்க. வந்து கேட்டுப் பாருங்க. யாரும் என்னைப் பத்தி தப்பா சொல்ல மாட்டாங்க” என்று ஜெப்ரி சொல்ல “மக்கள் கேட்டாங்க. விஜய் சேதுபதி கேட்க முடியாது. அவரு ஹோஸ்ட்டு” என்று கிரைம் ரேட்டை கூட்டிக் கொண்டே போனார் அர்னவ்.
பிறகு இந்த விவகாரத்தைக் கடந்து இருவரும் டாப் 6-ல் இருக்கும் போட்டியாளர்களை வாழ்த்தினார்கள். பவித்ரா டைட்டில் வின்னராம். (அப்படித்தான் ஆகி விடுமோ?!). “முத்து. உனக்கு பேனர்லாம் வெச்சிருக்காங்கடா. வெளில கொண்டாடறாங்க” என்றார் சத்யா. “யாரைப் பத்தியும் கவலைப்படாத. உன் மனச்சாட்சிக்கு பதில் சொன்னா போதும்” என்று விஷாலை புன்னகைக்க வைத்தார் ஜெப்ரி. “என்னைப் பத்தி தப்பா பேசினப்ப நீங்க எனக்காக குரல் தந்ததுக்கு நன்றி” என்பதையும் ஜெப்ரி பகிர்ந்து கொண்டது சிறப்பு.
வரிசையாக பேஷண்டுகளைக் கவனித்த தர்ஷிகா
அர்னவ்விற்காக விழுந்த அடிகள் தன் மேலும் பட்டதால் உஷ்ணமான ரவி “எங்களுக்கு கொடுத்த வேலையை செஞ்சோம். என் வயசுக்கு ஏத்த பக்குவத்தோட பண்ணேன். எந்த உள்நோக்கமும் கிடையாது” என்று விளக்கம் கொடுத்தார் ரவி. “அட!.. விடுங்கப்பா. பொங்கலை செலிபிரேட் பண்ணுவோம்’ என்று உற்சாகத்தைக் கொண்டு வர முயற்சித்தார் முத்து.
“நீங்க பேசுனது தப்புண்ணே..” என்று அர்னவ்விடம் பேச ஆரம்பித்தார் தர்ஷிகா. ‘அண்ணனை உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பாத்தாங்கம்மா’ என்கிற மாதிரி சங்கடப்பட்டார் அர்வன். (உசுப்பேத்தறவன் கிட்ட உம்முன்னும்…) “இருந்தாலும் டிக்னிட்டின்னு ஒண்ணு இருக்குல்ல. அதை பார்த்திருக்கணும்” என்று தர்ஷிகா சொல்ல விஷாலின் லவ் டிராக் பற்றிய பேச்சை அர்னவ் ஆரம்பிக்க “அது வேண்டாண்ணே” என்று லாவகமாக கட் செய்தார் தர்ஷிகா.
அடுத்த பேஷண்டை நோக்கி சென்றார் தர்ஷிகா. அது ஆனால் விபரீதமான சம்பவத்திற்கு இட்டுச் சென்றது. ‘பிளே பாய்ன்றது வில்லங்கமான வார்த்தை சாச்சும்மா.. அர்த்தம் சரியா தெரியாம சொல்லியிருக்கக்கூடாது. தப்பு” என்று தர்ஷிகா சொன்னவுடன் சுவிட்ச் போட்ட பொம்மை மாதிரி காலை உதைத்துக் கொண்டு அழுதார் சாச்சனா. இடையில் ‘காமிராவிற்காக அழலை’ என்கிற ஸ்டேட்மெண்ட் வேறு. ‘உங்களுக்காகத்தான் சொன்னேன். அண்ணனுக்காகத்தான் சொன்னேன். நான் வெளில போறேன். பயமா இருக்கு” என்று ‘இன்னாடா அவார்டா கொடுக்கறாங்க’ ரேஞ்சிக்கு சாச்சனா அழுதது உண்மையான பதட்டத்தினாலா அல்லது சம்பந்தப்பட்டவர்களே வந்து தப்பில்லை என்று சொல்லி விட்டதாலா?
“சாச்சும்மா.. நான் உன்னை ஏதாவது சொன்னேனா.. இல்லைலல” என்கிற தவிப்புடன் சமாதானப்படுத்தினார் விஷால். குளித்து திரும்பிய முத்து கூட தலை துவட்டாமல் தங்கைக்காக அப்படியே ஓடி வந்தார்.
ஆக்ரோஷமாக முட்டிக்கொண்ட தர்ஷிகாவும் ரவியும்
அடுத்த பேஷண்டை நோக்கி சென்றார் தர்ஷிகா. ‘அது சரியான பைத்தியம் இல்ல. இன்னமும் சரியாகாத பைத்தியம்’ என்கிற காமெடி மாதிரி இந்தச் சந்திப்பு மாறிற்று. சம்பிரதாயமாக ஆரம்பித்த உரையாடல் உஷ்ணமாக ஆரம்பித்தது. “விஷால் பேரை டேமேஜ் பண்ற மாதிரி நீதான் வெளில இண்டர்வியூ கொடுத்தே. அதனாலதான் வரிசையா வந்து கேட்டாங்க” என்று ரவி சொல்ல, “எனக்குன்னு டிக்னிட்டி இருக்கு. இது எங்க பர்சனல். நான் எப்பவும் அவனை கீழே தள்ள மாட்டேன்” என்று தர்ஷிகா வெடிக்க “உன் டிராமலாம் இங்க வேணாம். எனக்குத் தோணினதை நான் சொன்னேன்” என்று பதிலுக்கு ஆத்திரப்பட்டார் ரவி.
விஷாலையும் கூப்பிட்டு தன் தரப்பு கோணத்தை ரவி பகிர “இதை நாங்களே பேசி தீர்த்துக்கறோம். ப்ளீஸ். விடுங்க’ என்கிற மாதிரி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஷால். “விஷாலை கூப்பிட்டு கூப்பிட்டு பேசி நைட் எல்லாம் மண்டையைக் கழுவறாரு” என்று ரவி மீது புகார் சொன்னார் தர்ஷிகா. இந்த சீசனில் யாருக்குமே பொடுகுத் தொல்லை வருவதற்கு வாய்ப்பேயில்லை. அந்த அளவிற்கு மற்றவர்களின் மண்டையை ஆளாளுக்கு சுத்தமாக கழுவியிருக்கிறார்கள் போலிருக்கிறது.
ஸ்டோர் ரூம் பெல். ‘ஐய்யா. ஏதாவது சாப்பாடு அனுப்பியிருப்பாங்களா..’ என்று கதவைத் திறந்தால் ரஞ்சித்தும் ஆனந்தியும் சினிமாக்காட்சி மாதிரி ஒருவரையொருவர் ரொமான்ஸாக பார்த்துக் கொண்டு உறைந்திருந்தார்கள். மீண்டும் உற்சாகம் திரும்பியது. “தள்ளிப் போங்க” என்று ரஞ்சித்தை தள்ளி விட்டு ஆனந்தியை கட்டிக் கொண்டார் பவித்ரா. “உனக்கு யாரும் சப்போர்ட் இல்லைன்னு கவலைப்பட்டே. ஆனா யார் சப்போர்ட்டும் இல்லாம இத்தனை நாள் நின்னிருக்கே தெரியுமா. அதுதான் உன் பலம்” என்று பவித்ராவை வஞ்சனையில்லாமல் பாராட்டினார் ஆனந்தி.
விஷால் - தர்ஷிகா - A Cute Conversation
ஒருவழியாக அந்தச் சந்திப்பு நடந்தது. ஆம், தர்ஷிகாவும் விஷாலும் தங்களின் தனிப்பட்ட உரையாடலை ஆரம்பித்தார்கள். மனரீதியாக, தான் எத்தனை முதிர்ச்சியான பெண் என்பதை தர்ஷிகா மீண்டும் நிரூபித்தார். ‘எப்படியிருக்கே?” என்று தர்ஷிகா கேட்க “பார்த்துட்டுதானே இருந்திருப்பே’ என்று விஷால் பதில் சொல்ல, மணிரத்னம் பட வசனம் போல் ஆரம்பித்தது.
“நான் வெளில போனதுக்கு நான்தான் காரணம். ஒரு பப்ளிக் போரம்ல ஒருத்தரை பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கு துணிச்சல் வேணும். நான் அதை செஞ்சேன். அப்படின்னா நான் நானாத்தான் இருந்திருக்கேன்.” என்று நோ்மையான வாக்குமூலத்தை தந்தார் தர்ஷிகா. பிறகு மெல்ல எதிர்தரப்பிலும் பிரச்சினை இருக்கிறது என்பதை குண்டூசி வார்த்தைகளால் ஆரம்பித்தார். “இதை நான் மார்க்கெட்டிங் நோக்கத்துல நிச்சயம் பண்ணலை” என்பதில் அந்த ஊசி இருந்தது.
‘ஸ்பெஸ்’ ‘ஹோப்’ என்கிற இரண்டு வார்த்தைகளை கவனமாகவும் சரியாகவும் பயன்படுத்தினார் தர்ஷிகா. அவர் சொல்ல வந்ததை இப்படித்தான் புரிந்து கொள்ள முடிந்தது. “உன் மேல் ஈர்ப்பு வந்ததை வெளிப்படையாக சொன்னேன். அது என் சறுக்கல்தான். ஆனால் நீயும் அதற்கான இடம் தந்தாய். வார்த்தைகளால் மறுப்பு சொன்னாலும் செயல்கள் அப்படியாக இல்லை. எனக்கு நம்பிக்கை தந்தாய்” என்று தர்ஷிகா சொன்னதை சினிமா வசனத்தில் கூட இப்படி இயல்பாக எழுதி விட முடியாது.
‘அம்மா மோதிரத்தை திருப்பிக் கொடுங்க’ என்று தர்ஷிகா சொன்னதில் இருந்து வீட்டில் அவருக்கு கிடைத்த எதிர்ப்பையும் மனஉளைச்சலையும் புரிந்து கொள்ள முடியும். சாதாரணமாகவே ஒரு பரிசை திருப்பி வாங்குவது என்பது மனம் உடையச் செய்யும் செயல். அதிலும் இந்த மாதிரி விஷயத்தில் ஒரு பெண் செய்வது இதயத்தையே உடைக்கும் செயல். அத்தனையையும் உள்ளே புதைத்துக் கொண்டு மிக இயல்பாக இந்த விஷயத்தைச் செய்தார் தர்ஷிகா.
முடிவிற்கு வந்த லவ் டிராக் உறவு
“எப்பவுமே நான் உன்னை விட்டுக் கொடுத்ததில்லை. உன் மேல மதிப்பு இருக்கு” என்று விஷால் சொன்னதும் உண்மை. ஸ்பேஸ் கொடுத்த ஒரே தவறு மட்டும்தான் விஷாலிடம் இருக்கிறதே தவிர, மற்றபடி அவருமே ஒரு ஜென்டில்மேனாகத்தான் இந்த விஷயத்தை கையாண்டார். ‘என் மேல நெகட்டிவ் விமர்சனம் வந்தா கூட ஓகே. ஆனா அந்தப் பொண்ணுங்க மேல வரக்கூடாது” என்று முன்னர் சொன்ன ஸ்டேட்மெண்ட்டே அவரை ஜென்டில்மேனாக காட்டுகிறது.
மார்கெட்டிங் என்கிற வார்த்தையை மீண்டும் தர்ஷிகா பயன்படுத்த, திடுக்கிட்ட விஷால், ‘நானா. நானா அப்படிச் சொன்னேன்?’ என்று அதிர்ச்சியடைந்தார். “ஆமாம். விஷால். சொன்னே. சத்யா,ராணவ் கூட இருக்கும் போது ‘அதுவும் ஒரு மார்க்கெட்டிங்’ன்னு சொன்னே. நான் நிச்சயமா அப்படிப் பண்ணலை” என்றார் தர்ஷிகா. “டாப் 6ல வந்தது பெரிய விஷயம். ஆட்டத்துல ஃபோகஸ் பண்ணு. KEEP YOUR HEAD TALL. நீ தலையைக் குனிய வேண்டிய அவசியமே இல்ல.” என்று விஷாலை வாழ்த்தி விட்டு பதிலுக்கு கூட காத்திருக்காமல் இடத்தை விட்டு அகன்றார் தர்ஷிகா. இடிந்து போய் அமர்ந்திருந்தார் விஷால்.
பிறகு மோதிரத்தை திருப்பித் தந்து விட்டு விஷாலும் தர்ஷிகாவும் நிகழ்த்திய உரையாடலும் அத்தனை அழகாக இருந்தது. ஓர் அறுவை சிகிச்சை போல இந்த சர்ச்சையை இருவருமே கவனமாக கையாண்டார்கள்.
இன்றைய பிரமோவில் ஒரு புதிய டிவிஸ்ட் இருக்கிறது. ‘பணப்பெட்டியை எடுப்பவர்கள் ஆட்டத்தை தொடரலாமாம். ஆனால் அதிலும் சில விதிகள் இருக்கின்றன’ என்று கூடுதல் டிவிஸ்ட். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.