China Dam: உலகின் மிகப்பெரிய அணை கட்டும் சீனா; இந்திய - சீனா உறவில் விரிசல் உண்டாகுமா?!
'மீண்டும்...மீண்டுமா' என்பதுபோல உலகின் மிகப்பெரிய அணை கட்டும் பணியை முடுக்கிவிட்டுள்ளது சீனா.
இன்றைய தேதியில் உலகின் மிகப்பெரிய அணையாக இருக்கும் 'த்ரீ கார்ஜஸ் டேம் (Three Gorges Dam)' சீனாவில் தான் உள்ளது. இந்த அணை மத்திய சீனாவில் அமைந்துள்ளது. 'சீனாவின் மிகப்பெரிய அணை' எனத் தொடங்கப்பட்ட த்ரீ கார்ஜஸ் டேம் கட்டுமானத் திட்டம், போக போக 'உலகின் மிகப்பெரிய அணை' கட்டுமானமாக உருமாறியது.
இதெல்லாம் இருக்கட்டும்...சீனா தற்போது கட்டுப்போவதாக கூறும் அணைக்கும், இந்தியாவுக்கும் மிகப்பெரிய சம்பந்தம்... இல்லை... இல்லை பிரச்னை உள்ளது. புதியதாக சீனா கட்ட உள்ள உலகின் மிகப்பெரிய அணை திபெத்தில் உள்ள இமாலயப் பகுதியில் கட்டப்பட உள்ளது. இந்தப் பகுதி இந்திய எல்லைக்கு மிக அருகில் உள்ளது.
இந்தியா மட்டுமல்ல...
இமாலயப் பகுதி பல அரிய வகை மரங்கள், செடிகள், கொடிகள், விலங்குகள் என பசுமை மற்றும் இயற்கை நிறைந்தப் பகுதி என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. கட்டுமானம் என்று வரும்போது, நிச்சயம் இவற்றை அழித்துதான் அந்த அணை கட்டப்படும். உலகில் பசுமை இல்ல வாயுக்கள், மாசுக்கள் ஏற்கெனவே தாறுமாறாக அதிகரித்துகொண்டிருக்கும் இந்த வேளையில், காடுகள் அழிக்கப்படுவது இந்தியா, சீனாவுக்கு மட்டுமல்ல பிற உலக நாடுகளுக்குமே பிரச்னைதான்.
சுற்றுச்சூழலுக்கு அடுத்து பார்த்தால், புவியியல் ரீதியாக இமயமலை நிலநடுக்கம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ள பகுதியாகும். இப்படி நிலநடுக்கம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள பகுதியில் இவ்வளவு பெரிய கட்டுமானம் வரும்போது, அந்த நிலத்தை சுற்றியுள்ள பகுதிகளும், மக்களும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாவர்கள். இதில் இந்தியாவில் இருக்கும் இமய மலை பகுதியும், இந்திய மக்களும் அடக்கம்.
த்ரீ கார்ஜஸ் அணை குறித்து தெரிந்துகொள்வோமா?
த்ரீ கார்ஜஸ் அணை சீனாவின் யாங்க்ட்சே ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. முன்னரே கூறியிருப்பதுப்போல இது மத்திய சீனாவில் அமைந்துள்ளது.
இந்த அணை கட்ட 1920-களிலேயே பேச்சு எழுந்தாலும், 1955-ம் ஆண்டு தான் திட்டம் போடப்பட்டது. இதற்கடுத்தும், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு, 1994-ம் ஆண்டு கட்டுமானம் தொடங்கி 2006-ம் ஆண்டு அணை உருவாகியது. ஆனாலும், அணையில் அனைத்து ஹைட்ரோ எலெக்ட்ரிக் பிளான்ட்டுகளும் நிறுவப்பட்டு, முழு செயல்பட்டுக்கு வர 2012-ம் ஆண்டு ஆகிவிட்டது. ஆக, இந்த அணை முழுவதுமாக செயல்பாட்டுக்கு வர கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
இந்த அணையின் நீளம் 7,600 அடி... உயரம் 607 மீட்டர் ஆகும். இந்த அணை கட்ட 2.8 லட்சம் டன் கான்க்ரீட்டும், 4.63 லட்சம் மெட்ரிக் டன் ஸ்டீலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அணை கிட்டத்தட்ட 600 கிலோ மீட்டர்களை உள்ளடக்கி உள்ளது.
இந்த அணை கட்டுமானத்தின்போது, குறைந்தபட்சம் 1.3 மில்லியன் மக்களாவது இடம்பெயர்க்கப்பட்டிருப்பார்கள். பல இயற்கை வளங்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய மற்றும் முக்கிய கட்டடங்களும் அழிக்கப்பட்டிருக்கிறது. அதனால், இப்போது வரை அந்தப் பகுதியில் அதிக நிலச்சரிவுகளும், நில நடுக்கங்களும் ஏற்படுகின்றது என்று குற்றச்சாட்டு எழுந்துக்கொண்டே இருக்கிறது.
0.06 நொடிகள்...
நாசாவின் தகவல்படி, 'தி கார்ஜஸ் அணை' கட்டுமானத்திற்கு பிறகு, பூமி சுற்றுவதில் 0.06 நொடிகள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
'சீனாவின் மிகப்பெரிய அணை' என்று முதலில் கூறப்பட்டு, பின்னர் உலகின் மிகப்பெரிய அணையாக எழுப்பட்ட 'தி கார்ஜஸ் அணை'யாலேயே இந்த நிலை என்றால், 'உலகின் மிகப்பெரிய அணை' என்று கூறப்பட்டே எழுப்படும் அணையினால் எவ்வளவு அபாயங்கள் உருவாகும் என்று சற்று யோசித்து பார்க்க வேண்டும்.
இந்தியா?!
இந்தியாவில் பிரம்மபுத்திரா என்றும், சீனாவில் சாங்போ என்றும் அழைக்கப்படும் நதி மீது தான் புதிய அணை எழுப்பப்பட உள்ளது. பிரம்மபுத்திரா நதி இமய மலையின் கைலாஷ் தொடர்களில் உருவாகி, திபெத் வழியாக அருணாச்சலப் பிரதேசத்திற்கு வந்து இந்தியாவிற்குள் நுழைகிறது. பின்னர், அசாம் மற்றும் வங்காளதேசம் வழியாக வங்கக்கடலை அடைகிறது. இதற்கிடையில் இருக்கும் ஏகப்பட்ட இந்திய மற்றும் வங்காளதேச மாநிலங்களுக்கு முக்கிய நீராதாரமாக இது திகழ்கிறது.
ஆக, சீனா புது அணை கட்டும்போது, அதிலேயே அதிக அளவிலான நீரை சேமிக்கும். இதனால், பிரம்மபுத்திரா நதியை நம்பியிருக்கும் மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்படலாம். அடுத்ததாக, புவியியல் ரீதியாக முக்கியமாக கருதப்படும் இமயப்பகுதியில் கான்க்ரீட்டுகள், ஸ்டீல் ஆகியவை பயன்படுத்தப்படும்போது, பெரிய பாதிப்புகள் உருவாகும். மேலும், அதி கன மழை மற்றும் வெள்ளத்தால் அணை நிரம்பும்போது, உபரி நீர் திறக்கப்பட்டால் அந்த நதியால் பயன்பெறும் இந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும்.
சீனா...
மீண்டும், சீனாவில் பெரிய எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்க்கப்படுவார்கள். பல கட்டடங்கள் அழிக்கப்படும்...அரிய மற்றும் அருகி வரும் உயிரினங்கள் அழியலாம்.
சீனாவை பொறுத்தவரை, உலக அளவில் வளர்ந்த நாடாகவும், பெரிய பொருளாதார நாடாகவும், நம்பர் ஒன் நாடாகவும் ஆக வேண்டும் என்பது கனவு. ஏன் வெறி என்றே கூட சொல்லலாம். இதற்காக அவர்கள் பல விஷயங்களையும், முன்னெடுப்புகளையும் செய்துகொண்டே வருகிறார்கள். அப்படியான ஒன்று தான் இந்த அணை கட்டுமான முடிவும். இந்த அணைக்கான தேவை இருப்பதைக் காட்டிலும், இதனால், பல தீமைகள் உண்டாகலாம்.
நீர் சேமிப்பு, உலகிலேயே பெரிய அளவிலான மின்சார உற்பத்தி ஆகியவை தி கார்ஜஸ் டேமுக்கு காரணமாக கூறப்பட்டாலும், பெரிய அளவிலான வெள்ளங்களை தடுத்து மக்களை பாதுகாப்பதும், வெள்ளத்தால் பரவும் தொற்றுநோய்களை தடுப்பதும் அந்த டேமின் முக்கிய நோக்கம் என்று கூறப்பட்டது. ஆனால், தீ கார்ஜஸ் டேம் கட்டப்பட்டப்பிறகு தான், அந்தப் பகுதியில் நிலச்சரிவுகள் மற்றும் நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படுகின்றன.
புது டேம்...
இப்போது புதியதாக கட்டப்படும் டேம் குறித்து இதுவரை வெளியாகி உள்ள தகவல்கள்...
இந்த டேம் கட்டப்பட்டு முடித்த உடன், இதுவே உலகின் மிகப்பெரிய ஹைட்ரோபவர் திட்டமாக இருக்கும். இந்த அணையில் இருந்து ஆண்டுக்கு 300 பில்லியன் kWh மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். தி கார்ஜஸ் அணையில் இப்போது ஆண்டுக்கு 88.2 பில்லியன் kWh உற்பத்தி செய்யப்படுகிறது.
அதனால், 1.3 மில்லியனுக்கு மூன்று மடங்கு அதிகமான மக்கள் இந்தப் புது அணை திட்டத்திற்காக இடம்பெயர்க்கப்படுவார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதை சீன அரசு இன்னும் உறுதி செய்யவில்லை.
இந்தியாவின் நிலைப்பாடு
இந்தியா இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு பேசும்போது, 'இந்தத் திட்டத்தால் பிரம்மபுத்திரா நதியை நீராதாரமாக கொண்ட இந்திய மாநிலங்கள் பாதிக்கப்படாது என்று சீன அரசு உத்தரவாதம் தர வேண்டும். மேலும், இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும். இது குறித்து இந்தியா மற்றும் சீனா வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் பேசப்பட்டுள்ளது" என்று கூறுகிறது.
இதுவரை, இந்த நதி குறித்து இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் எந்த ஒப்பந்தமும் ஏற்பட்டிருக்கவில்லை. இதனால், இந்த புதிய அணை கட்டுமானத்தில் இந்தியாவிடம் சீனா எதுவும் கலந்துரையாடவில்லை. ஒருவேளை, ஒப்பந்தம் இருந்திருந்தால், 'அணை' பேச்சாக தொடங்கும்போதே, இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கும். தற்போது, இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் இல்லாதது இந்த விஷயத்தில் பெரும் பாதகமாக முடிந்துள்ளது.
ஏற்கெனவே, இந்தியாவிற்கும், சீனாவிற்கும் உறவு சரியில்லாத நிலையில், இந்தத் திட்டம் மேலும் விரிசலை கொண்டுவரலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.