CPIM: புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி; அகில இந்திய மாநாட்டில் அறிவிப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக கேரளாவைச் சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு மதுரையில் கடந்த 2 ஆம் தேதி தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மூத்த தலைவர்களுடன், திரைப்படத்துறை படைப்பாளிகளும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மாநில உரிமை குறித்த கருத்தரங்கில் கேரள முதலமைச்சருடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
மாநாட்டின் நிறைவு நாளான இன்று மாலை மதுரை சுற்றுச்சாலையில் மாபெரும் செந்தொண்டர் அணிவகுப்பும், பாண்டி கோயில் அருகே பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.
அதற்கு முன்பாக கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள், பொலிட் பீரோ உறுப்பினர்கள் கலந்தாலோசித்து புதிய பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்தனர். பொதுச்செயலாளர் பொறுப்புக்கு பொலிட் பீரோவிலுள்ள ஆந்திராவைச் சேர்ந்த ராகவலு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டார். இது குறித்த அறிவிப்பை கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.

கேரள அரசில் கல்வி அமைச்சராக முன்பு பணியாற்றிய எம்.ஏ.பேபியின் பெயரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பரிந்துரைத்ததாகவும் அதை மற்ற நிர்வாகிகள் ஏகமனதாக ஆதரித்ததாகவும் சொல்லப்படுகிறது.