சச்சின் : `வெளிநாடுகளிலும் செம ரீச்; அடுத்த ரீரிலீஸ்..!’ - அஜித் பட அப்டேட் கொடு...
CSK : இந்த 5 கேள்விகள்... பதில் சொல்வாரா 'கேப்டன்' தோனி?
'சொதப்பும் தோனி!'
சென்னை அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி. ஏறக்குறைய இந்த அணியின் ப்ளே ஆப்ஸ் வாய்ப்புகள் முடிந்துவிட்டது. எஞ்சியிருக்கும் சொற்ப வாய்ப்பையும் அடுத்தப் போட்டியில் அவர்களே முடித்தும் வைத்துவிடுவார்கள். 2020 சீசனுக்குப் பிறகு சென்னை அணியின் மிக மோசமான சீசன் இது.
ருத்துராஜ் கேப்டனாக இருந்தபோது நிறைய தவறுகள் நடந்தது. தோனி மீண்டும் கேப்டன் ஆனவுடன் அதையெல்லாம் சரி செய்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டியில் தோனி எடுக்கும் முடிவுகளும் புதிராகவே இருக்கிறது. அவர் எடுக்கும் சில முடிவுகளில் லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது.
'தீபக் ஹூடா தேவைதானா?'
சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியையே எடுத்துக் கொள்ளுங்களேன். ப்ளேயிங் லெவனில் தீபக் ஹூடா எதற்கு? சீசனில் தொடக்கத்திலேயே முதல் லெவனிலேயே அவர் இருந்தார். அப்போது ஒன்றுமே செய்யவில்லை என்று ட்ராப் செய்து பென்ச்சில் வைத்தார்கள். ஒரு போட்டியில் இம்பாக்ட் ப்ளேயராக வேறு இறக்கியிருந்தார்கள்.

எந்த இம்பாக்ட்டும் கொடுக்காமல் அவுட் ஆகி சென்றார். கடைசியாக 10-15 ஐ.பி.எல் இன்னிங்ஸ்களில் ஒன்றிரண்டு முறைதான் 20 ரன்களுக்கு மேலாகவே எடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட வீரருக்கு எதற்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகள்? நேற்று ஓப்பனிங்கில் இறங்கிய ஆயுஷ் மாத்ரேவுக்கு 17 வயது. ஷேக் ரஷீத்துக்கு 21 வயது. இவ்வளவு இளம் வயது பேட்டர்களை சிஎஸ்கே ஓப்பனிங் இறக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
இந்தளவுக்கு ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கும்போது தீபக் ஹூடாவுக்கு பதிலும் இன்னொரு இளம் வீரரை எடுத்து தோனி வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே?
'நம்பர் 4 இல் ஜடேஜா எதற்கு?'
அதேமாதிரி, ஜடேஜாவை நம்பர் 4 க்கு ப்ரமோட் செய்திருக்கிறார் தோனி இந்த முடிவே விமர்சனத்துக்குரியதுதான். ஏனெனில், ஜடேஜா டெத் ஓவர்களில் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு பழக்கப்பட்டவர். ஆனால், நம்பர் 4 இல் வரும்போது ஸ்பின்னர்களை அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஸ்பின்னர்களுக்கு எதிராக நடப்பு சீசனில் ஜடேஜாவின் ஸ்ட்ரைக் ரேட் 100 க்கும் கீழாகத்தான் இருக்கிறது. அப்படியிருக்க அவரை ஏன் பவர்ப்ளேக்குள்ளாகவே தோனி இறக்க வேண்டும்? 2020 சீசனில் சாம் கரனை ஓப்பனிங்கெல்லாம் இறக்கி பார்த்திருந்தார். அது ஒர்க் அவுட்டே ஆகவில்லை. இதோ இப்போது நம்பர் 3 யில் இறக்கி பார்த்திருக்கிறார். அதுவும் வேலைக்கு ஆகவில்லை.
'மோசமான பௌலிங் ரொட்டேஷன்!'
பௌலிங் ரொட்டேஷனிலும் எக்கச்சக்க தவறுகளை தோனி செய்திருந்தார். நூர் அஹமதுக்கு பவர்ப்ளேயில் ஓவர்கள் கொடுப்பதில்லை என்பது பெரும் விமர்சனமாக முன்வைக்கப்பட்டது. அது தோனியின் காதுகளுக்கு எட்டிவிட்டதோ என்னவோ! சன்ரைசர்ஸூக்கு எதிராக நூரை பவர்ப்ளேயில் வீச வைத்திருந்தார்.

ஆனால், பவர்ப்ளேயில் ஒரு ஓவரை கொடுத்துவிட்டு அத்தோடு அவரது ஸ்பெல்லை முடித்துக் கொண்டார். அதன்பிறகு, நேராக 12 வது ஓவரில்தான் நூரை அழைத்து வந்தார். அந்த ஓவரில் இஷன் கிஷனின் விக்கெட்டை அவர் எடுத்துக் கொடுத்தார். நூருக்கு முதல் ஸ்பெல்லிலேயே கூடுதலாக ஒன்றிரண்டு ஓவர்களை கொடுத்திருந்தால் இன்னும் தாக்கம் ஏற்படுத்தியிருக்க முடியும்
ஏனெனில், பவர்ப்ளேயின் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 37 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அங்கேயே நூரையும் தொடர்ந்திருந்தால் சன்ரைசர்ஸ் மீது இன்னும் அழுத்தம் ஏறியிருக்கும்.

பதிரனாவுக்கு தொடர்ந்து 4 ஓவர்கள்!
அதேமாதிரி, பதிரனாவை 13 வது ஓவரில் அறிமுகப்படுத்தி ஒரே ஸ்பெல்லில் டெத் ஓவர் வரை 4 ஓவர்களை மூச்சிறைக்க வீச வைக்கிறார். இப்படி 4 ஓவர்களையும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஒரே ஸ்பெல்லில் வீசுவது அரிதாகத்தான் நடக்கும்.
பதிரனா மாதிரி வித்தியாசமான ஆக்சன் கொண்ட வீரர் தொடர்ந்து 4 ஓவர்களை வீசுவது அணிக்கும் நல்லது கிடையாது. அவருக்கும் நல்லது கிடையாது. பதிரனாவை எப்படி பயன்படுத்தினால் அவரிடம் சிறப்பான செயல்பாட்டை பெற முடியும் என இலங்கை கிரிக்கெட்டுக்கே இங்கிருந்து தோனி பாடமெடுத்தார். அப்படிப்பட்டவர் இப்போது அவர் விஷயத்தில் எதையோ முயற்சிக்க நினைத்து சொதப்புவது ஏமாற்றமே.
முன்னர், பிராவோ அணியில் இருக்கும் போது இப்படி கடைசி 4 ஓவர்களை வீச வைப்பார். ஆனால், பிராவோ டெக்னிக், ஆக்ஷன் வேறு. அது பதிரானா ஆக்ஷன், டெக்னிக்-க்கு கை கொடுக்கவில்லை.
'பிட்ச் மீது பழி!'
அதேமாதிரி, பிட்ச்சின் மீதுமே தோனியும் ப்ளெம்மிங்கும் பழி போடுகின்றனர். 'எங்களுக்கு Home Advantage யே இல்லை.' என ப்ளெம்மிங் பேசுகிறார். '2010 க்குப் பிறகு நாங்கள் நினைத்த பிட்ச் கிடைக்கவே இல்லை.' என தோனி பேசியிருக்கிறார். வெற்றி பெறும்போதெல்லாம் இருவரும் பிட்ச்சைப் பற்றி எதுவுமே பேசவில்லை.

இப்போது அணியில் இருக்கும் ஓட்டைகளை மறைக்க Damage Control ஆப்சனாக பிட்ச்சை கையில் எடுத்து விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதே பிட்ச்சில் மற்ற அணிகளெல்லாம் அத்தனை சௌகரியமாக ஜெயிக்கின்றனவே?
மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் ஒரு லாஜிக்கான பதிலை தோனி தன்னுடைய செயல்பாட்டின் மூலம் கொடுக்கவே இல்லை. வெறும் கையில் முழம் போட்டுக் கொண்டிருக்கிறார் என்பதே பெரும் விமர்சனம்!