ராகு பெயர்ச்சி: திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பூஜை!
ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு ராகு பரிகார தலமான திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் கிரிகுஜாம்பிகை - பிறையணி அம்மன் சமேத நாகநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவலில் நவக்கிரகங்களில் ராகு தலமாக விளங்கி வருகிறது.
இங்கு ராகு பகவான் தனி சன்னதியில் நாகவல்லி - நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.
இவரது திருமேனியில் பால் அபிஷேகம் செய்யும் போது அந்த பாலானது நீல நிறமாக மாறும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில், ராகு பெயர்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
ராகு பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வார். இது ராகுப்பெயர்ச்சி விழாவாக நடைபெறுகிறது. இந்தாண்டு ராகு பெயர்ச்சி விழா கடந்த 24ம் தேதி கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து நேற்று இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன. ராகுபெயர்ச்சியான இன்று பிற்பகல் நான்காம் கால பூஜை நிறைவு பெற்று கடம் புறப்பாடும், அதனை தொடர்ந்து மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், கலசாபிஷேகம் ராகு பகாவனுக்கு நடைபெற்றது.
தொடர்ந்து மாலை 4:20 மணிக்கு, ராகுபகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அப்போது, ராகு பகவானுக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களுக்கு கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு ராகுபகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது. கடந்த 23ம் தேதி முதல் வரும் 28ம் தேதி லட்ச்சார்ச்சனை நடைபெறுகிறது.