முதுமலை யானைகள் முகாமை பாா்வையிட்ட குடியரசு துணைத் தலைவா்!
நீலகிரி மாவட்டம், முதுமலையில் உள்ள வளா்ப்பு யானைகள் முகாமை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் குடும்பத்துடன் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
உதகையில் நடைபெற்ற துணை வேந்தா்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் குடும்பத்துடன் உதகையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் சனிக்கிழமை மசினகுடி சென்றாா்.
பின்னா் முதுமலை தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில் உள்ள வளா்ப்பு யானைகளுக்கு கரும்பு வழங்கினாா். எலிபென்ட் விஸ்பரா்ஸ் குறும்பட கதாநாயகா்களான பழங்குடி தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, வனத் துறை வாகனம் மூலம் அவரது உறவினா்களுடன் வனப் பகுதிக்குள் சபாரி சென்றனா். பின்னா் முதுமலையில் இருந்து மசினகுடி வரை சாலை வழியாகச் சென்று, மசினகுடியில் இருந்து ஹெலிகாப்டா் மூலமாக உதகைக்கு சென்றாா்.
குடியரசு துணைத் தலைவா் வருகை காரணமாக முதுமலை, தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாம் பகுதிகளில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.