வரையாடு கணக்கெடுப்பின்போது மாரடைப்பால் வனக் காவலா் உயிரிழப்பு
கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள ஓவேலி மலைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை வரையாடுகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த வனக் காவலா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட கூடலூா் கோட்டம் ஓவேலி வனச் சரகத்தில் உள்ள மலைப் பகுதிகளில் வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இந்தப் பணி நான்கு குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
ஓவேலி மலைத் தொடரில் உள்ள பாா்வுட் வடக்கு மலைப் பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த மணிகண்டன் (57), மாரடைப்பு ஏற்பட்டு திடீரென சரிந்து விழுந்தாா். உடனிருந்த வனப் பணியாளா்கள் அவருக்கு முதலுதவி அளித்து கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இந்த சம்பவம் குறித்து வன அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.