``தவறுகளை மறைக்க மத்திய அரசிடம் சண்டை இழுத்து, பிரச்னை செய்கிறது திமுக..'' - ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றியம் மற்றும் ராஜபாளையம் தொகுதி சார்பில் அதிமுக பூத் கமிட்டி மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு தலைமை உரையாற்றினார்.
இந்தநிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், "அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டுகிற பணியை திமுக கட்சியினர் செய்கிறார்கள்.

அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி முயற்சியால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி, பேரூராட்சிகள், ராஜபாளையம் நகராட்சிகள், பேரூராட்சிகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து தரமான பைப்புகளை வைத்து குடிநீர் சப்ளை செய்தோம். தற்போது திமுக ஆட்சியில் போடப்படும் பைப்புகளை கைகளால் அழுத்தினாலே உடைந்துவிடும் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது.
குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழல், சாக்கடை அள்ளுவதில் ஊழல், குப்பை அள்ளுவதில் ஊழல். திமுக ஆட்சியில் ஊழல் மட்டுமே நடைபெறுகிறது.
வேலை ஒன்றும் நடைபெறவில்லை. தி.மு.க. ஆட்சியில் மூன்று வருடம் கவுன்சிலராக இருந்தவர்கள் மிகப்பெரிய வீடு கட்டுகிறார்கள் லஞ்சம் வாங்கி பிழைக்கிறார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் அதிமுக ஆளவேண்டும்.

தமிழகத்தில் திமுக ஆட்சியின் மீது மக்களிடம் வெறுப்பு அலை வந்துள்ளது. திமுகவினர் மத்திய அரசிடம் தேவையில்லாமல் சண்டை இழுப்பதும், கொடுத்த நிதியை வாங்கி சரியான திட்டங்களை செயல்படுத்தாமல் மொழி பிரச்னையை கிளப்புவதும், இனப்பிரச்னையை கிளப்புவதும் செய்கிறது. அவர்கள் செய்த தவறுகளை மறைப்பதற்காக, மற்றவர்களை தூண்டிவிட்டு மதப் பிரச்னையும், மொழி பிரச்னையும் வைத்து திமுக தப்பிக்க பார்க்கிறது" என பேசினார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
