ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி விடுதியில் மாணவர் மர்ம மரணம்.. போலீஸார் விசாரணை!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். வெளியூர், வெளி மாநில மாணவர்கள் தங்கி பயில கல்லூரியில் ஆண், பெண் தனித்தனி விடுதி உள்ளது.
அதன்படி, பல்கலைக்கழகத்தில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நெளபடா ஹர்சித் என்ற 19 வயது மாணவன் பி.டெக் (சிஎஸ்சி) முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில், மாணவன் ஹர்சித், வழக்கம்போல வகுப்பறைக்கு வந்தவர், திடீரென கல்லூரி விடுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் சிறிது நேரத்திலேயே மாணவன் ஹர்சித், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் தீயாய் பரவியது.
இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணன்கோவில் போலீஸார், மாணவர் ஹர்சித்தின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
முதலாம் ஆண்டு மாணவர் நௌபடா ஹர்சித், தற்கொலை செய்தது தொடர்பாக அவரின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் இறப்பு கொலையா?, தற்கொலையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செயல்பட்டு வரும் இந்த தனியார் பல்கலைக்கழகத்தில், தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை சம்பவம் அடிக்கடி நடப்பது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையொட்டி, கல்லூரி தரப்பில் மாணவர்களுக்கு ஏதும் அழுத்தம் தரப்படுகிறதா? என்று விடுதி மற்றும் கல்வி குறித்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவேண்டும், மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை தவிர்ப்பதற்கு முறையான கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
