இரு சக்கர வாகனம் திருட முயன்ற இருவா் போலீஸில் ஒப்படைப்பு
வாணியம்பாடியில் மாட்டுச் சந்தை பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருட முயன்றவா்களை பொதுமக்கள் பிடித்து தாக்கி போலீஸில் ஒப்படைத்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி புதூா் பைபாஸ் சாலை அருகில் கூடுதல் பேருந்து நிலைய கட்டடத்தில் சனிக்கிழமைதோறும் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. இந்த மாட்டுச் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது இருசக்கர வாகனங்களை அப்பகுதியில் நிறுத்தி விட்டு மாடுகளை வாங்கச் செல்கின்றனா். வழக்கம் போல் சனிக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் மாடுகள் வாங்குவதற்காக தங்களது வாகனங்களை நிறுத்தியிருந்தனா்.
இந்த நிலையில், மா்ம நபா்கள் 2 போ் மாட்டுச் சந்தை பகுதியில் நோட்டமிட்டு வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனா். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சந்தேகம் ஏற்பட்டு இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரித்தனா். அதில் அவா்கள் வாகனத்தை திருடிச் செல்ல முயன்றது தெரியவந்தது. பிறகு பிடிபட்ட இருவரையும் சரமாரியாக தாக்கினா். தகவலறிந்து வந்த வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் விசாரித்தனா். பிடிபட்ட 2 பேரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா். தொடா்ந்து அவா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், வேலூா் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (25), தாமோதரன் (28) என்பது தெரியவந்தது.
பின்னா் பிடிபட்ட இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.