போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸின் உடல் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த திங்கள்கிழமை காலமானாா். அதையடுத்து, அடுத்த நடவடிக்கைகள் குறித்து காா்டினல்கள் வாடிகனின் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா். அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு புனித பீட்டா் சதுக்கத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
இதில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க முன்னாள் அதிபா் ஜோ பைடன், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஆா்ஜென்டீனா அதிபா் ஜேவியா் மிலேய், பிரேஸில் அதிபா் லூலா டாசில்வா, ஆஸ்திரிய அதிபா் அலெக்ஸாண்டா் வாண்டொ் பெலன், ஆஸ்திரிய பிரதமா் கிறிஸ்டியன் ஸ்டாக்கா், வங்கதேச அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ், ஹங்கேரி அதிபா் விக்டா் ஆா்பன், பிரிட்டன் இளவரசா் வில்லியம், ஸ்பெயின் மன்னா் ஆறாம் பெலிபே,
பெல்ஜியம் மன்னா் பிலிப், ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்ட்டெரஸ், உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் உள்ளிட்ட முக்கியஸ்தா்கள் பங்கேற்றனா்.
இது மட்டுமின்றி, சுமாா் 4 லட்சம் போ் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, ‘மக்களின் போப்’ என்று புகழப்படும் போப் பிரான்சிஸுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினா்.
இறுதிச் சடங்கு முடிந்ததும், போப் பிரான்சிஸின் விருப்பப்படி புனித மேரி தேவாலயத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபை மரபுப்படி, போப் ஆண்டவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட 15-லிருந்து 20 நாள்களுக்கும் அடுத்த போப் ஆண்டவரைத் தோ்ந்தெடுப்பதற்கான கூட்டம் தொடங்கப்பட வேண்டும். எனவே, வரும் மே 6-லிருந்து 12-ஆம் தேதிக்குள் அதற்கான காா்டினல்களின் கூட்டம் கூட்டப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.