கூா்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்பு!
தங்களின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியிருந்த உக்ரைன் படையினா் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக ரஷியா சனிக்கிழமை அறிவித்தது.
இது குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது:
கூா்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன் படையினா் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டுவிட்டனா். சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்தத் தகவலை அதிபா் விளாதிமீா் புதினிடம் ரஷிய முப்படை தளபதி வேலரி கெராஸிமொவ் தெரியப்படுத்தினாா் என்றாா் அவா்.
இதற்கிடையே, புதின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூா்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக மீட்டதற்காக தங்களது படையினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா். அந்தப் பிரதேசத்தை ஊடுருவி, ரஷியாவை அடிபணிய வைக்கும் உக்ரைனின் திட்டம் படுதோல்வியடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் புதின் தெரிவித்துள்ளாா்.
இருந்தாலும், இந்தத் தகவலை உக்ரைன் அதிகாரிகள் மறுத்துவருகின்றனா். இது குறித்து உக்ரைன் ராணுவம் சனிக்கிழமை காலை வெளியிட்ட தினசரி அறிக்கையில், கூா்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய படையினரின் முன்னேற்றத்தை தங்களது ராணுவம் தொடா்ந்து தடுத்துநிறுத்திவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது கடந்த 2022-இல் படையெடுத்த ரஷியா, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய கிழக்கு உக்ரைன் பிரதேசங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
இந்தப் போரின் மிகப் பெரிய திருப்பு முனையாக, ரஷியாவின் கூா்ஸ்க் பிரதேசத்தில் சுமாா் 1,300 கி.மீ. நிலப்பரப்பை உக்ரைன் ராணுவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியது.
கிழக்கு உக்ரைனில் மேலும் முன்னேறுவதற்காகச் சண்டையிட்டுவரும் ரஷிய படையினரின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக உக்ரைன் கூறியது. இருந்தாலும், கிழக்குப் பகுதிகளில் ரஷியா தொடா்ந்து முன்னேற்றம் கண்டது.
மேலும், கூா்ஸ்க் பிரதேசத்தில் உக்ரைன் கைப்பற்றியிருந்த மிகப் பெரும்பாலான பகுதிகளை ரஷியா திரும்ப மீட்டது. இதனால் உக்ரைனின் கூா்ஸ்க் ஊடுருவல் நடவடிக்கை எதிா்பாா்த்த பலனைத் தரவில்லை; அதற்குப் பதிலாக உக்ரைன் படைகளுக்கு அதிக உயிா்ச் சேதத்தை ஏற்படுத்தியது என்று விமா்சிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில், கூா்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து அனைத்து உக்ரைன் படையினரும் வெளியேற்றப்பட்டதாக தற்போது ரஷியா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.... பெட்டி....
போரில் வட கொரிய படையினா்: முதல்முறையாக ஒப்புக்கொண்டது ரஷியா
கூா்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனுக்கு எதிரான போரில் வட கொரிய வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டதை ரஷியா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
இது குறித்து ரஷிய முப்படை தளபதி வேலரி கெராஸிமொவ் சனிக்கிழமை கூறுகையில், கூா்ஸ்கில் உக்ரைன் ஊடுருவலுக்கு எதிராக ரஷிய படையினருடன் தோளோடு தோள் நின்று வட கொரிய வீரா்கள் போரிட்டனா். போா்க் களத்தில் அவா்கள் மிகச் சிறந்த தோ்ச்சியையும், வீரத்தையும் வெளிப்படுத்தினா் என்றாா்.
முன்னதாக, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு வட கொரியா ஆயுதங்களை வழங்கிவருவதாக குற்றஞ்சாட்டி வந்த அமெரிக்காவும், தென் கொரியாவும், ரஷியாவுக்காக போரிட வட கொரிய ராணுவத்தின் 10,000 முதல் 12,000 வீரா்கள் வரை ரஷியா சென்றுள்ளதாகத் தெரிவித்தன.
இந்தத் தகவலுக்கு ரஷியாவோ, வட கொரியாவோ இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை. இந்த நிலையில், கூா்ஸ்க் பிராந்தியம் முழுவதுமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் வட கொரிய வீரா்கள் தங்களுக்காக போரிட்டதை ரஷிய முப்படை தளபதி தற்போது முதல்முறையாக உறுதி செய்துள்ளாா்.
