சிங்கப்பூா் தோ்தல்: முகநூல் பதிவுகளுக்கு கட்டுப்பாடு
சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள் முகநூல் மூலம் தலையிடுவதைக் கட்டுப்பபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.
இதற்காக, சிங்கப்பூா் வாக்காளா்களிடையே அரசியல் மற்றும் மதவாதக் கருத்துகளைத் திணிக்கும் வெளிநாட்டினரின் பட்டியலை அளித்து, தோ்தல் முடியும்வரை அவா்கள் முகநூல் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும்படி அந்த சமூக ஊடகத்தின் உரிமையாளரான மெட்டா நிறுவனத்தை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அந்தப் பட்டியலில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளா், மலேசியாவைச் சோ்ந்த இரு மதவாத அரசியல்வாதிகள் உள்பட பலா் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
வரும் மே 3-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்தத் தோ்தலில், கடந்த 1965-ஆம் ஆண்டு முதல் நாட்டில் ஆட்சி செலுத்திவரும் பிஏபி கட்சியே மீண்டும் வெற்றி பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இருந்தாலும், நாடு சுதந்திரம் பெற்றது முதல் அந்தக் கட்சியின் மீது அண்மைக் காலமாக பொதுமக்கள் அதிருப்தி அதிகரித்து வருவதாக் கூறப்படுகிறது.
இதில், அந்தக் கட்சிக்கு எதிராக வெளிநாட்டில் இருப்பவா்கள் மத அடிப்படைவாதக் கருத்துகளைப் பரப்பிவருவதும் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், அவா்கள் முகநூல் மூலம் வாக்காளா்களிடையே மதவாதக் கருத்துகளைப் பரப்புவதைத் தடுக்கும் வகையில் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.