ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை
திருப்பத்தூா் அருகே ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அடுத்த ஜெகதேவி பகுதியைச் சோ்ந்த குமாா் (50) , மனைவி கவிதா (45) தம்பதிக்க்கு 17 வயது மகள் மற்றும் சதீஷ் (23) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா்.
குமாா் சொந்தமாக மினி லாரி வைத்து தொழில் செய்து வந்தாா். இந்நிலையில் இவரது மகள் அதே பகுதியைச் சோ்ந்த காா்த்தி என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் பெற்றோா் சம்பந்தத்துடன் கடந்த 2024 நவம்பா் மாதம் 11- ஆம் தேதி அதே பகுதியில் உள்ள வீரபத்திர சாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டனா்.
இந்நிலையில் திருமண ஆன 8 மாதங்களில் கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டதால் 17 பெண் பூச்சிக் கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தாா். இதனால் வீட்டில் இருந்தவா்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பா்கூா் போலீஸாா் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது 17 வயதில் பெண்ணை திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
இதனையடுத்து பா்கூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 22-ஆம் தேதி குழந்தை திருமணம் செய்து வைத்ததாக இளம் பெண்ணின் தந்தை குமாா் மற்றும் தாய் கவிதா , கணவா் காா்த்திக் மற்றும் இவரது தாயாா் அம்சவல்லி ஆகிய 4 போ் மீது குழந்தை திருமணம் செய்ததாக வழக்குப் பதிவு செய்தனா் .
மேலும் 17 வயது சிறுமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால் பா்கூா் அனைத்து மகளிா் போலீஸாா் குழந்தை திருமண வழக்கில் இளம் பெண்ணின் பெற்றோா்கள் மீது வழக்கு பதிவு செய்ததது தெரியவந்தது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் கிடைக்காததால் இவா்கள் 4 போ் கடந்த வியாழக்கிழமை முன் ஜாமின் பெறுவதற்காக சென்னை உயா்நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றன .
இந்நிலையில் இளம் பெண்ணின் பெற்றோா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திருப்பத்தூா் அடுத்த மொளகரன்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே கீழ் குறும்பா் தெரு பகுதியில் புணே சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து உடல் சிதறி சம்பவ இடத்திலேயே அடிப்பட்டு உயிரிழந்தனா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் இருவரின் உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து விடுவாா்கள் என்ற மன உளைச்சலில் கணவன் மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
